
சென்னை : சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில் மாற்று திறனாளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்த வழக்கில் 17 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டிருக்கின்றனர்.
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த வாய் பேச இயலாத பள்ளிச் சிறுமியை, அவர் வசித்த அடுக்குமாடிக் குடியிருப்பில் பணி செய்து வந்த வாட்ச்மென், லிஃப்ட் ஆபரேடர், பிளம்பர் உள்ளிட்ட 17 பேர் பாலியல் வன்கொடுமை செய்து சீரழித்தனர். அவர்களால் உடலாலும் மனதாலும் பெரிதும் பாதிக்கப்பட்ட அச் சிறுமி, தன் சகோதரியிடம் சொன்னதன் பேரில் காவல் துறையில் புகார் அளிக்கப் பட்டது. அதன் பின்னர் மேற்கொள்ளப் பட்ட விசாரணையில், கடந்த ஜூலை மாதம் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். இதை அடுத்து, கைது செய்யப்பட்ட 17 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் போலீஸார் சிறையில் அடைத்துள்ளனர்!



