மதுரை குருவித்துறையில் சித்திரரத வல்லப பெருமாள் கோயிலில் இருந்து திருடுபோன 4 ஐம்பொன் சிலைகள் திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டியில் சாலையோரம் வீசப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டன. இந்த 4 சிலைகளும் சேதமடைந்துள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான 4 ஐம்பொன் சிலைகள் கடந்த 14ஆம் தேதி கொள்ளையடிக்கப் பட்டது. இது குறித்து கோயில் அர்ச்சகர் ரெங்கநாத பட்டர் காடுபட்டி காவல்துறையில் அளித்த புகாரின் பேரில், மாவட்ட
கண்காணிப்பாளர் மணிவண்ணன், அங்கிருந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். அதன் அடிப்படையில் கொள்ளையர்களைத் தேடிவந்தனர்.. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் விளாங்குடி என்ற இடத்தில் அந்த நான்கு சிலைகளும் மீட்கப்பட்டன. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் சிலைகளைப் பார்வையிட்டு, இந்தக் கொள்ளை தொடர்பாக இன்று விசரணை நடத்துகிறார்.
முன்னதாக, குருவித்துறையில் வைகை கரையோரம் சித்திர ரத வல்லபபெருமாள் கோயிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை என்பதால் சிறப்பு பூஜைகள் முடிந்து மாலை அர்ச்சகர்கள் கோயிலை பூட்டிச் சென்றனர். நள்ளிரவு 12.30 மணி அளவில் மின் வயர்கள் உரசி தீப்பிடித்ததால் கோயிலில் அபாய மணி ஒலித்தது. இதையடுத்து கோயில் காவலர்கள் ராஜகோபுர அவசர வழியே உள்ளே சென்று சுற்றி பார்த்தபோது ஒன்றும் தெரியவில்லை.
இதையடுத்து மின் வயரில் குரங்குகள் அல்லது பறவைகள் உரசி தீப்பிடித்திருக்கலாம் என நினைத்து அபாய ஒலி சத்தத்தை நிறுத்திவிட்டு வந்துள்ளனர்.
ஆனால், அதிகாலை கோயில் ஊழியர் மணிகண்டன் கோவிலின் வடக்குப் பகுதிக்குச் சென்றபோது அங்குள்ள சுவரில் வேட்டியால் கயிறுபோல் கட்டி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கோயில் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் கோயில் வாசல் கதவை திறந்து உள்ளே சென்றபோது அங்கிருந்த பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, சீனிவாச பெருமாள் ஆகிய 4 ஐம்பொன் சிலைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து காவல்துறைக்கு அளிக்கப் பட்ட தகவலின் பேரில், போலீஸார் துப்பறியும் நாய், கைரேகை நிபுணர்கள், தடயஅறிவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். பின்னர் கோயிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்ததில் முகமூடி அணிந்த 2 கொள்ளையர்கள் சிலைகளை திருடுவது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களைத் தேடி வந்தனர்.