சேலம்: நான் மட்டும் நிம்மதியாகவா இருக்கிறேன்… முதல்வர் பதவியை விட்டு விலகத் தயாராகவே இருக்கிறேன்… என்று அதிமுக.,வினர் மத்தியில் பேசி ஷாக் கொடுத்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
சேலத்தில் நேற்று மாநகர் மாவட்ட அதிமுக., வளர்ச்சிப் பணி குறித்த ஆலோசனைக் கூட்டம் அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தலைமை ஏற்றுப் பேசினார் முதல்வர் பழனிசாமி!
அப்போது அவர், “ஜெயலலிதா மறைவுக்குப் பின் கட்சியை உடைக்க, ஆட்சியைக் கலைக்க என்னவெல்லாமோ செய்து பார்க்கிறார்கள். நான் மட்டும் என்ன நிம்மதியாகவா இருக்கிறேன்; முதல்வர் பதவியை விட்டு விலகத் தயார். முதல்வர் கனவு காண்பவர்கள் முறையாக மக்களைச் சந்தித்து, தேர்தல் மூலம் ஜனநாயக முறையில் பதவிக்கு வரட்டும். இனி இந்த ஆட்சியைக் கவிழ்க்கவே முடியாது என திமுக.,வினரே பேசத் துவங்கிவிட்டனர்.
இளைஞர்கள் அதிகம் பேரைக் கொண்ட அதிமுக., வலுவாக உள்ளது. வழக்கு முடிந்தால் எந்த நேரத்திலும் உள்ளாட்சித் தேர்தல் வரலாம். நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வார்டுக்கு 625 புதிய உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். 60 வார்டுகளில் கூட்டம் நடத்தி வளர்ச்சிப் பணிகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும்.” என்று பேசினார்.




