அஞ்சு பவுன் நகைக்காக அக்காவைக் கொன்ற தம்பி கைது!

Published:

murder - 2026

ஈரோட்டில் 5 பவுன் நகைக்காக அக்காவைக் கொன்ற தம்பி நேற்று கைது செய்யப் பட்டார். பாறாங் கற்களால் சடலத்தை மறைக்க முயற்சி செய்தும் கண்டுபிடித்தது போலீஸ்!

ஈரோடு மாவட்டம், சென்னிமலை நெசவாளர் காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் தனசேகர் (24). இவர் நிரந்தர வேலையில்லாமல் கிடைத்த வேலைகளை செய்து வந்துள்ளார்.

இதே காலனியில் வசிக்கும் ஆறுமுகம் மனைவி சிந்து (27). ஆறுமுகம் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்திலும், சிந்து சென்னிமலையில் உள்ள தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்திலும் பணியாற்றினர். இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. தனசேகர், சிந்துவுக்கு தம்பி முறை உறவினர்.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு தனசேகரிடம் ஆறுமுகம் குடும்பச் செலவுக்கு ரூ.5000 கடனாகக் கேட்டுள்ளார். அவரும் ஏற்பாடு செய்வதாகத் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் காலை, ஆறுமுகத்தை தொடர்பு கொண்ட தனசேகர், `தோப்பு பாளையத்தில் நண்பர் ஒருவர் பணம் தருவதாக சொல்லியிருக்கிறார். நீங்களோ அல்லது சிந்துவோ நேரில் வரவேண்டும்’ என்று கூறினார்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

இதனால் ஆறுமுகம், சிந்துவை அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். இதையடுத்து, சிந்து வேலை செய்யும் நிறுவனத்துக்கு போய் அவரை பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார். இதன் பிறகு, மாலை 3 மணி அளவில் ஆறுமுகத்தை சந்தித்த தனசேகரன், பணம் ரூ.5 ஆயிரத்தை கொடுத்துவிட்டு, அக்காவை பனியம்பள்ளி பிரிவில் பஸ் ஏற்றிவிட்டேன்’ என்று கூறியுள்ளார்.

ஆனால் சிந்து இரவு ஆகியும் வீட்டுக்கும் வரவில்லை. செல்போனும் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால், சந்தேகம் அடைந்த ஆறுமுகம் மற்றும் உறவினர்கள் தனசேகரனிடம் விசாரித்துள்ளனர். அவர் குடிபோதையில் இருந்ததோடு, முன்னுக்கு பின் முரணாக பேசியதால், சென்னிமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரித்தபோது 5 பவுன் நகைக்காக சிந்துவை கொன்று, ஊத்துக்குளி அருகே உள்ள வனப்பகுதியில் பிணத்தை மறைத்து வைத்ததாகக் கூறியுள்ளார்.

இதையடுத்து நேற்றுசிந்துவின் சடலத்தை மறைத்து வைத்திருந்த இடத்தை தனசேகரன் அடையாளம் காட்டினார். அங்கு பாறாங்கற்களால் பாதி மூடப்பட்ட நிலையில் சிந்துவின் சடலம் கிடந்தது.

சம்பவ இடத்திற்கு பெருந்துறை டி.எஸ்.பி. ராஜ்குமார் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் சென்று ஆய்வு செய்தனர். சிந்துவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

அஞ்சு பவுன் நகைக்காக அக்காவை தம்பியே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related articles

Recent articles

spot_img