கால் டாக்ஸி டிரைவர் ராஜேஷ் தற்கொலை; மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை
rajesh call taxi driver - 2026

சென்னை காவல் துறையினரின் அநாகரிகப் பேச்சினால் தற்கொலை செய்துகொண்ட கால்டாக்ஸி ஓட்டுநர் ராஜேஷின் தற்கொலை குறித்து மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. இதுகுறித்து அறிக்கை அளிக்குமாறு காவல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது.

போலீஸார் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று பல முறை போலீஸாருக்கும் அதிகாரிகளுக்கும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்! இதற்காக, தியான வகுப்புகள், மன ஊக்கப் பயிற்சி வகுப்புகளும் நடத்தப் பட்டுள்ளன. ஆனாலும் பொதுமக்கள், வாகன ஓட்டிகளிடம் போலீஸார் கடுமையாகவே நடந்துகொள்கின்றனர்.

ஏற்கெனவே சென்னையில் கடந்த ஆண்டு இதே போன்று டாக்சி ஓட்டுநர் மணிகண்டன் தீக்குளித்து இறந்த சம்பவத்திலும், திருச்சியில் உஷா என்ற பெண் தனது கணவருடன் சென்ற போது போலீஸாரால் துரத்தப் பட்டு கீழே விழுந்து உயிரிழந்த சம்பவத்திலும் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.

இந்நிலையில் சென்னை கால் டாக்ஸி ஓட்டுநர் ராஜேஷ் போலீஸாரின் நெருக்கடியாலும் அராஜகத்தாலுமே தாம் தற்கொலை செய்துகொள்வதாக காணொளி பதிவு செய்து, ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இந்த விவகாரமும் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து செய்திகள் வெளியானதன் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.

இது குறித்து சென்னை மாநகர காவல் ஆணையருக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில் இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி 4 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில மனித உரிமைகள் ஆணைய நீதிபதி டி.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.