தயாநிதி மாறன் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயற்சி! இந்து மக்கள் கட்சி புகார்!

Published:

dayanidhi maran - 2026

தமிழகத்தில் திமுக.,  சார்பில் மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் தயாநிதி மாறன் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற முயற்சி செய்வதாகவும், அதை  தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கோரி,  இந்து மக்கள் கட்சி கோரிக்கை புகார் மனுவை தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ளது!

இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் ஆனந்த் என்பவர் அளித்த புகார் மனுவில்….

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக திரு.தயாநிதிமாறன் அவர்கள் போட்டியிடுகிறார். இவர் தொலைதொடர்பு துறை (BSNL) ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

2ஜி ஸ்பெக்டரம் ஊழல் வழக்கிலும் இவரது கட்சிக்கு தொடர்புள்ளது. சன்குழும நிறுவனங்களை இவரது சகோதரர் கலாநிதிமாறன் நடத்தி வருகிறார். தாயாநிதிமாறன், கலாநிதிமாறன் குடும்பத்தார் உலகின் பெரும் பணக்காரர்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளவர்கள் ஆவார்கள்.

தயாநிதிமாறன் திமுக சார்பில் மத்திய மந்திரியாகவும் பணியாற்றியுள்ளார். சுமங்கலி கேபிள் விஷன் உள்ளிட்ட இவர்களது குடும்பத்திற்கு சொந்தமான பல்வேறு தொழில்களின் மூலம் பலகோடி ரூபாய் வருமானம் வருகிறது. ஊழல் வழக்கில் ஜாமீன் பெற்றுள்ளார், வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இத்தகைய ஊழல் வழக்குகளில் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் செய்து சொத்து சேர்த்துள்ளதாக இவர்கள் மீது குற்றச்சாட்டு உள்ளது.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

இதன் மூலம் சேர்த்த கள்ளப் பணத்தையும் கருப்பு பணத்தையும் தங்கள் தொகுதி வாக்காளர்களுக்கு விநியோகம் செய்து தங்கள் தொகுதியில் பண பலத்தால் வெற்றி பெற முடியும் என்று இவர்கள் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்கள். இவர்கள் தங்களது வேட்புமனுவில் தாங்கள் நடத்தி வருகின்ற தொழிகள் குறித்தும் சொத்துக்கள் குறித்தும் முழு விவரங்களை தெரிவித்து இருக்கிறார்களா? என்கிற விபரம் மக்களுக்கு தெரிய வேண்டும்.

இவர்களின் கட்சிக்காரர்கள் நடத்தி வருகின்ற தொழிற்சாலைகள் மருத்துவக் கல்லூரிகள் ஆகியவை வியாபார நோக்கத்தின் அடிப்படையிலும் கொள்ளை லாபம் அடிக்கும் நோக்கத்தின் அடிப்படையிலும் இயங்கி வருபவை ஆகும். ஏராளமான பணம் இத்தகைய தொழில்களில் மூலதனம் செய்து சம்பாதித்து வைத்திருக்கும் இவர்கள் தங்கள் தொகுதியில் மட்டுமல்ல திமுக கூட்டணி போட்டியிடுகிற அனைத்து தொகுதிகளிலும் தங்கள் பண பலத்தை பயன்படுத்தி வெற்றி பெற்று விட துடிக்கின்றார்கள்.

எனவே தேர்தல் ஆணையம் இவர்களின் சொத்துக்களையும் அதன் மூலம் வருகின்ற வருமானத்தை முறையாக காட்டியிருக்கிறார்களா? வேட்பு மனுவில் குறிப்பிட்டு இருக்கிறார்களா? என்பதைப் பற்றியெல்லாம் ஆய்வு செய்து தவறு இருப்பின் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

இவர்களின் கட்சிக்காரர்கள் நடத்தும் மது ஆலைகள் மூலம் இவர்களுக்கு வருகின்ற வருமானம் எவ்வளவு? அந்த வருமானத்திற்கு இவர்கள் முறையாக கணக்கு வைத்திருக்கிறார்களா? இது விஷயங்களை எல்லாம் தேர்தல் ஆணையம் முழுமையாக ஆய்வு செய்து மக்களுக்கு தெரிவித்திட வேண்டும். ஜனநாயகத்தை பணநாயகம் ஆக மாற்ற முயலும் இவர்களின் தேர்தல் பிரச்சார விளம்பர நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தேவை ஏற்பட்டால் ஊழல் வருமானத்தின் மூலம் தேர்தலில் போட்டியிடும் இவர்களது வேட்பாளர் அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும். வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்க முயற்சி செய்யும் இவர்களது அனைத்து சதித்திட்டங்களையும் முறியடிக்க வேண்டி கோரிக்கை மற்றும் புகார் மனு பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது.. என்று கூறப்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img