ஆக.1 முதல் அத்திவரதர் நின்ற கோல தரிசனம்! ஆய்வுக்குப் பின் முதல்வர் எடப்பாடி தகவல்!

Published:

cm edappadi athivarathar darshan - 2026வரும் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதியில் இருந்து அத்தி வரதர் நின்ற கோலத்தில் தரிசனம் தருவார் என்று, காஞ்சிபுரத்தில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் அத்திவரதர் வைபவம் நடைபெற்று வருகிறது. ஜூலை 1ஆம் தேதி தொடங்கி 48 நாட்களுக்கு இந்த வைபவம் நடக்கிறது.

அதுவும், 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும் நிகழ்வு என்பதால், அண்டை மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்ய ஆர்வத்துடன் வருகிறார்கள்.

இந்நிலையில், ஜூலை 23 செவ்வாய்க்கிழமை நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அத்திவரதரை தரிசிக்க காஞ்சிபுரம் வந்திருந்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூர்ணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கோயிலின் வசந்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ள அத்திவரதரை தரிசித்தார். பின்னர் பக்தர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி அன்னதானம் வழங்கினார்.

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனத்துக்காக செய்யப் பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது… அத்திவரதரை தரிசிக்க லட்சக்கணக்கில் அன்பர்கள் வருகின்றார்கள். இதனால், அத்திவரதரை இடமாற்றம் செய்யலாம் என்று யோசனை கூறப் பட்டது. அத்திவரதரை இடமாற்றம் செய்யும் விவகாரத்தில் ஆகம விதிமுறைகளை பின்பற்ற வேண்டியுள்ளது.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

ஆகஸ்டு 1-ஆம் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இதுவரை 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசித்து சென்றுள்ளனர்.இதுவரை 3.41 லட்சம் வாகனங்கள் காஞ்சிபுரம் வந்துள்ளன.

பக்தர்கள் வசதிக்காக 1,250 சக்கர நாற்காலிகள் பயன்படுத்தப்படும். நிழற் கூடம், மருத்துவ முகாம், காவல் உதவி மையங்கள் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.. என்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

Related articles

Recent articles

spot_img