தமிழிசை மீது தரக்குறைவான விமர்சனம்: சூரியா நற்பணி இயக்கம் வருத்தம்!

Published:

சென்னை:

தமிழக பாஜக., தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் மீது, நடிகர் சூரியா ரசிகர்கள் தரக்குறைவான விமர்சனம் செய்ததற்கு சூரியா நற்பணி இயக்கம் வருத்தம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அகில இந்திய சூர்யா நற்பணி இயக்கம் வெளியிட்ட அறிக்கை:

சூர்யா நீட் தேர்வை பற்றி தம்முடைய கருத்துக்களை பதிவிட்டு இருந்தார். அதற்கு சமூகத்தின் பல்வேறு தரப்புகளிடமிருந்தும் ஆக்கபூர்வமான ஆதரவு குரல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

எதிர்பாராதவிதமாக, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மட்டும், மேலோட்டமாக விமர்சித்துள்ளார். அது அவரது கருத்து. அதற்கு எதிர்வினையாக, சமூக வலைத்தளங்களில் உங்களில் சிலர் தரமற்ற வார்த்தைகளால் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனை விமர்சிப்பதாக அறிகிறோம். இதனை சூர்யா அண்ணன் ஒருபோதும் ஏற்க மாட்டார்.

கருத்து தளத்தில் வரும் விமர்சனங்களை நேர்மையாக எதிர்கொள்வதும் நமது ஆரோக்யமான செயல்பாடுகளால் எதிர்வினை யாற்றுவதுமே சூர்யா நமக்கு கற்றுத்தந்த நற்பண்பு. அதைவிடுத்து இது போன்ற தரமற்ற விமர்சனங்களில் இறங்கும் மன்ற உறுப்பினர்களையும், உறுப்பினராக அல்லாமல் சமூக வலைத்தளங்களில் செயல்படும் ரசிகர்களையும் வன்மையாக கண்டிக்கிறோம். மற்றபடி அந்த கட்டுரையில் இருக்கும் கருத்துக்களிலும் அதன் செயல் வடிவத்துக்கான பணிகளிலும் சூர்யா எப்போதும் உறுதியாக இருப்பார்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

அகரத்தை பற்றியும், சூர்யா பற்றியும் சமூகத்தில் உள்ள கல்வியாளர்களுக்கு நன்கு தெரியும். ‘செயல் அது ஒன்றே மிக உயர்ந்த சொல்’ என்ற தாரக மந்திரத்தில்தான் நம்முடைய நற்பணி இயக்கமானது எப்போதும் செயல்பட்டு கொண்டிருக்கிறது. “விளம்பரத்திற்காக எதையும் செய்யாதீர்கள், உங்கள் மனதார மற்றவர்களுக்கு உதவுங்கள்” என்ற சூர்யாவின் சொற்படியே கடந்த இருபது வருடங்களாக மன்றமானது செயற்படுகிறது. இனிமேலும் செயற்படும். ஒருவர் நம்மை கேள்வி கேட்பதனாலேயே அவரிடம் நம்முடைய உண்மைத் தன்மையை நிரூபிக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை.

நம்முடைய செயல்கள் யாரையும் காயப்படுத்தாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன் அளித்தால் போதுமானது. எம் தம்பிமார்களின் செயல்கள், டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனை எந்த விதத்திலாவது காயப்படுத்தி இருந்தால், அதற்கான வருத்தத்தை தெரிவித்து கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related articles

Recent articles

spot_img