அப்பாவைப் போல் மகனும் இளைய தலைமுறையை ஈர்ப்பார்: துரை.முருகன் சொன்னதன் பின்னணி!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

stalin duraimurugan - 2026

“தனது தந்தை திரு. @mkstalin அவர்கள் போலவே திரு. @Udhaystalin இளைய தலைமுறையினரை ஈர்ப்பார்” – என்று திமுக., பொருளாளர் துரைமுருகன் MLA அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

திமுக இளைஞர் அணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் திரைப்பட நடிகர் என்பதால் அவருக்கென்று தனி செல்வாக்கு உள்ளது என்றும், அது கட்சியின் வளர்ச்சிக்கு நிச்சயம் பயன்படும் என்றும் கூறியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞரணிச் செயலாளர் பதவியில் நியமிக்கப் பட வேண்டியிருந்ததால், அப்பதவியில் இருந்த வெள்ளக்கோவில் சாமிநாதன் விலகினார். இதை அடுத்து, திமுக சட்டவிதி 18, 19 பிரிவுகளின் படி இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சுமார் 35 ஆண்டுகளாக திமுக இளைஞரணி செயலாளராக இருந்தார் மு.க.ஸ்டாலின். அவர் இருந்த பதவியில் அவர் மகன் உதயநிதி நியமிக்கப்பட்டுள்ளார். இதை அடுத்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக., தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

உதயநிதிக்கு கட்சியின் பதவி வழங்கப் பட்டுள்ளதற்கு திமுக.,வில் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். திமுக பொருளாளர் துரைமுருகன் இது குறித்துக் கூறுகையில், உதயநிதி வருகையால் திமுக இளைஞரணி பிரகாசமாகும். இளைஞர் சமுதாயத்தின் விடிவெள்ளி உதயநிதி!

திமுகவுக்கு இளைஞர்களை ஈர்ப்பதற்கான அறிவிப்பு இது. உதயநிதியின் தேர்தல் பிரசாரங்களை பார்த்து நான் வியந்தேன். சொல்ல வேண்டிய கருத்தை கேட்பவர்கள் இதயத்தில் பதியும் படி பேசுவார் உதயநிதி!

தந்தையைப் போலவே இளைய தலைமுறையினரை ஈர்ப்பார் உதயநிதி!

ஸ்டாலினின் மகன் என்கிற செல்வாக்கை தாண்டி ஆற்றல் மிக்கவர் உதயநிதி!

திரைப்பட நடிகர் என்பதால் அவருக்கென்று தனி செல்வாக்கு உள்ளது, அது கட்சிக்கு நிச்சயம் பயன்படும். உதயநிதிக்கு பொறுப்பு வழங்கப்பட்டது எனக்கு மட்டுமல்ல கட்சியில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தி என்றார் துரை.முருகன்.

தென்சென்னையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது, உங்கள் தொகுதியின் அழகான வேட்பாளரை இழந்து விடாதீர்கள் என்று தமிழச்சி தங்கப்பாண்டியனுக்காக வாக்கு சேகரித்து, தொகுதி மக்களின் இதயத்தில் பதியும் படி பிரசாரம் செய்தார் உதயநிதி என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.