டெங்குவைத் தடுக்க தீவிர நடவடிக்கை: அமைச்சர் விஜயபாஸ்கர்!

Published:

vijaya baskar - 2026

டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகின்றது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர், செய்தியாளர்களிடம் கூறுகையில்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் இருவர் அனுமதிக்கப் பட்டுள்ளனர். அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோரில் 10 சதவீதம் பேருக்கு டெங்கு அறிகுறி உள்ளது.

காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகின்றது. தற்போது மழை பெய்து வரும் சூழ்நிலையில், டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடீஸ் கொசுக்களின் உற்பத்தியை தடுக்கவும், டெங்கு, தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் பொது சுகாதாரத் துறை பணியாளா்கள் பல்துறை அலுவலா்களுடன் இணைந்து ஒழிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.

இப்பணியாளா்கள் வீடுகளையும், சுற்றுப்புறங்களையும் பார்வையிட அனுமதிக்க வேண்டும். அவர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

கடுமையான காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, வாந்தி, கண்களுக்குப் பின்புறம் வலி, பசியின்மை, கடுமையான மூட்டு வலி போன்றவை டெங்கு காய்ச்சலின் அறிகுறியாகும்.

ஆகவே, காய்ச்சல் ஏற்பட்டால் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும். மருந்துக் கடை, பெட்டிக் கடைகளில் தாமாக மருந்து, மாத்திரைகளை வாங்கி உட்கொள்ள வேண்டாம்.

தற்போது பெய்யத் தொடங்கியுள்ள பருவமழை சுகாதாரத் துறைக்கு சவாலாக இருக்கும் என்று கூறினார்.

Related articles

Recent articles

spot_img