2011 தொடங்கி 2012ஆம் ஆண்டு வரை நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்பாட் ஃபிக்சிங்கில் ஈடுபட்டதாக கூறி அல் ஜசீரா தொலைக்காட்சி வெளியிட்டுள்ள ஆவணப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேட்ச் ஃபிக்சர் என்று ஐசிசியால் குற்றம்சாட்டப்படும் அனீல் முனாவர் குறித்த புலனாய்வு ஆவணப் படத்தை நேற்று அல்ஜசீரா தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தில், ஏழு போட்டிகளில் இங்கிலாந்து வீரர்களும், 5 போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர்களும், 3 போட்டிகளில் பாகிஸ்தான் வீரர்களும், மற்றொரு நாட்டைச் சேர்ந்த வீரரும் ஸ்பாட் ஃபிக்சிங்கில் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு தொடங்கி 2012ஆம் ஆண்டு வரை நடைபெற்ற போட்டிகளில், 6 டெஸ்ட் போட்டிகள், ஆறு ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் 26 ஸ்பாட் ஃபிக்சிங்குகள் நடைபெற்றதாக ஆவணப் படத்தில் புகார் கூறப்பட்டுள்ளது.
இந்தக் காலகட்டத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையேயான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி, தென்னாப்பிரிக்கா – ஆஸ்திரேலியா இடையேயான கேப் டவுன் டெஸ்ட் போட்டி, உலகக் கோப்பைத் தொடரின் ஐந்து போட்டிகள், மற்றும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டித் தொடர்கள் நடைபெற்றுள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தில் 2012ஆம் ஆண்டில் நடைபெற்ற இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் இடையேயான டெஸ்ட் போட்டிகளும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளன. இதுகுறித்து பேசியுள்ள ஐசிசி ஊழல் தடுப்புப் பிரிவின் பொது மேலாளர் அலெக்ஸ் மார்சல், கிரிக்கெட்டில் நேர்மையை நிலைநிறுத்த உறுதிபூண்டிருப்பதாகக் கூறியுள்ளார். அல் ஜசீரா ஆவணப் படம் கூறியுள்ள புகார்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.