நான் இரட்டை சதம் அடித்தபோது, கிறிஸ் கெய்ல் எனக்கு வாழ்த்து தெரிவித்து முதுகைத் தட்டிக் கொடுத்தது எனக்கு நகைப்பாக இருந்தது என்று கூறியுள்ளார் நியூஸிலாந்து வீரர் குப்டில். சனிக்கிழமை நியூசிலாந்து – மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையே நடந்த உலகக் கோப்பைப் போட்டியின் நான்காவது மற்றும் கடைசி காலிறுதிப் போட்டியில், நியூசிலாந்து வீரர் மார்டின் குப்டில் 163 பந்துகளில் 237 ரன்களை அடித்து சாதனை செய்தார். இதற்கு முன்னர், லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வேயுடனான போட்டியில், மேற்கு இந்தியத்தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல் 215 ரன் எடுத்தார். அதுதான், உலகக் கோப்பையில் அதிகபட்ச இரட்டைச் சத ரன்னாக இருந்தது. அதனை குப்டில் முறியடித்தார். மார்டின் குப்டில் 200 ரன் எடுத்த போது, அவருக்கு வாழ்த்து தெரிவித்த கிறிஸ் கெய்ல், குப்டிலின் முதுகைத் தட்டிக் கொடுத்தார். இது குறித்து குப்டில் பின்னர் கூறியபோது, “கிறிஸ் கெய்ல் என்னிடம், வாழ்த்துக்கள், 200 ரன்கள் லீக்குக்கு வரவேற்கிறேன்’ என்றார். எனக்கு அவரது வாழ்த்து மிகவும் வேடிக்கையாக இருந்தது. அவர் அதற்குப் பின்னர் அனைவருமே வாழ்த்து தெரிவிக்கும் நல்லுணர்வில் அவருக்குப் பின் நின்றனர். நான் இந்த ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஒவ்வொரு பந்தையும் ஆட வேண்டும் என நினைத்தேன். அவ்வாறே ஆடினேன். கடைசி 10 ஓவர்கள் வேடிக்கையாக ஆட முயற்சி செய்து, பந்துகளை பவுண்டரிகளை நோக்கி விரட்டினேன். எனக்கு எந்த வித நெருக்கடியும் இல்லை. அவ்வளவு நேரம் தாக்குப் பிடித்து முழு இன்னிங்க்ஸையும் விளையாட இதமாகத்தான் இருந்தது. எனக்கு அந்த கடைசி நேரத்தில் இரண்டு மூன்று பார்ட்னர்ஷிப் கிடைத்தது, அது 400 ஐ நோக்கி ஸ்கோரை உயர்த்த வழிசெய்தது” என்று கூறியுள்ளார்.