கருப்புப் பெட்டி மீட்பு: விபத்துக்குள்ளான விமானத்தில் 16 பள்ளிச் சிறுவர்கள்

Published:

german-airways தெற்கு பிரான்ஸின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் விபத்துக்குள்ளான ஜெர்மன்விங்ஸ் விமானத்தின் சிதிலமடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த விமானத்தில் ஜெர்மன் பள்ளி ஒன்றைச் சேர்ந்த 16 மாணவர்கள் இருந்தனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. பார்ஸிலோனா நகரிலிருந்து 150 பேருடன் செவ்வாய்க்கிழமை காலை புறப்பட்ட விமானம் ஃபிரான்ஸில் மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விமானத்தின் கருப்புப் பெட்டியை மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். இதனை பிரான்ஸ் உள்துறை அமைச்சர் பெர்னார்ட் கேஸிநேவ் தெரிவித்துள்ளார். ஆனால் இந்தப் பெட்டி, விமானம் பறக்கும்போது அது பறப்பது குறித்த தொழில்நுட்பத் தகவல்களை பதிவு செய்யும் கருவியா அல்லது கடைசி நேரத்தில் விமானிகளின் காக்பிட்டில் நடக்கும் உரையாடல் ஒலிகளைப் பதிவு செய்யும் கருவியா என்பது தெளிவாகவில்லை. இந்நிலையில், விபத்துக்குள்ளான விமானம் தூள் தூளாகச் சிதறியுள்ளதாகவும், விமானத்தின் சிதறிய பாகங்கள் சுமார் 2 கி.மீ. தொலைவுகு சிதறியிருப்பதையும் கண்டறிந்துள்ளனர். விமானத்தின் எந்தவொரு பகுதியும் இதுவரை முழுமையாகக் கிடைக்கவில்லை. விமானத்தில் பயணித்த 150 பேரும் உயிரிழந்துவிட்டதாகவே கருதப்படுகிறது. german-wing இந்நிலையில், விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலை ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் தெரிவித்தார். இந்தக் கோர விபத்து தன்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியதாக அவர் கூறினார். விபத்து நிகழ்ந்த இடத்தை நேரில் பார்வையிட, புதன்கிழமை இன்று அவர் அங்கு செல்லத் திட்டமிட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் கூறினார். முன்னதாக, ஜெர்மனியைச் சேர்ந்த “ஜெர்மன்விங்ஸ்’ நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ-320 ரக விமானம், ஸ்பெயினின் பார்ஸிலோனா நகரிலிருந்து, ஜெர்மனியின் டுஸல்டாஃர்ப் நகரை நோக்கி செவ்வாய்க்கிழமை காலை புறப்பட்டது. அந்த விமானத்தில் 144 பயணிகளும், விமானிகள் உள்பட 6 ஊழியர்களும் இருந்தனர். பயணிகளில் 67 பேர் ஜெர்மனியைச் சேர்ந்தவர்கள். ஸ்பெயின், துருக்கியைச் சேர்ந்தவர்களும் அந்த விமானத்தில் இருந்தனர். இந்நிலையில், உள்ளூர் நேரப்படி 10.47 மணிக்கு (இந்திய நேரப்படி பிற்பகல் 3.17 மணி) அந்த விமானத்திலிருந்து அவசர உதவி கேட்டு அழைப்பு வந்தது. இதையடுத்து, அந்த விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. தென்கிழக்கு பிரான்ஸின் பார்ஸிலோனெட் மலைப் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது அந்த விமானம் நொறுங்கியதாகத் தெரிகிறது. விமானம் பிரான்ஸ் பகுதியிலுள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடரில் விழுந்து நொறுங்கியது தெரிய வந்ததை அடுத்து, அங்கு மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img