பொழுதெல்லாம் அலைகிறான் மாயக் கண்ணன்!

கவிதைகள்
srikrishna - 2026

கண்ணன்
– கவிதை: மீ.விசுவநாதன்

மாலை நேரம்
ஜன்னலின் வழியாய்
வெளியைப் பார்த்தேன்
நீல ஆகாயத்தில்
வெண்ணை மேகத்தை
உருட்டி உருட்டி விளையாடுகிறான்
கண்ணன்

மிகப்பெரிய கருமேக அரக்கி
கண்ண வெண்ணையை
விழுங்க வருகிறாள்
சூரியப் பந்தால் ஓங்கி அடித்து
அவளை
மழையாய்ப் பொழிகிறான்
கண்ணன்

நான்
மெல்ல வீட்டை விட்டு
வெளியில் வருகிறேன்
ஆதவன் மறைய மறைய
ஒவ்வொரு நட்சத்திரமாகப்
பறித்துப் பறித்து என்னை
நோக்கி வீசிக் களிக்கிறான்
கண்ணன்

ஓடி ஓடி அவன்
கோவில் நந்தவனத்தில்
நுழைந்தேன்
என்னை நோக்கிச் சிரித்தபடி
ஒரு கொத்து
மனோரஞ்சிதப் பூக்களால்
முகத்தை வருடி விட்டு
“மாஸ்க்” போடாத
பரந்த மனவெளி எங்கும்
வாசமாமாய் நிறைந்தான்
கண்ணன்

ஒரு நீண்ட கம்பின்
உச்சியில்
உருட்டி வைத்த

சீனிமிட்டாய் ஜவ்வினை
“பாம்பு, தேள், பம்பரம்,
சைக்கிள், வாட்ச்” செய்து
அவன் வயதுக்
குழந்தைகளின் கைகளில்
ஒட்டி விட்டு
அவரோடு
ஒட்டிக் கொஞ்சுறான்
மிட்டாய்க் கண்ணன்

பிரபஞ்ச கோகுலதில்
உயிரெலாம் கோபியர்
அன்பெனும்
வெண்ணைக்குப் பொழுதெல்லாம்
அலைகிறான் அலைகிறான்
மாயக் கண்ணன் .

(இன்று(30.08.2021) ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமித் திருநாள்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.