அன்பான பிள்ளை
(மீ.விசுவநாதன்)
அழகழகாப் பிள்ளையாராம் – அவர்
ஆனைமுகப் பிள்ளையாராம்
குழந்தையவர் கையினிலே – சுவை
கொழுக்கட்டை கொண்டவராம்
அருகம்புல் எருக்கணிந்து- நம்
அகங்காரம் போக்கிடுவார்
பருகபல பட்சணங்கள் – தெருப்
பசங்களுக்குத் தந்திடுவார்
சின்னதான கண்களாலே – நாம்
செய்வதெலாம் அறிந்திடுவார்
சொன்னசொல்லைக் காப்பாற்றும் -நம்
சொக்கன்மகன் பிள்ளையாராம்
மூஞ்சூறு வாகனனாய் – நம்
மோகமதை அழிப்பாராம்
பாஞ்சுவந்து ஆபத்தில் – தன்
பக்தர்களைக் காப்பாராம்
வலப்புறத்து தந்தத்தால் – கதை
பாரதத்தைப் படைத்தாராம்
பலப்பலவாய்ப் பிரியாமல் – நம்
பாரதத்தை ஆள்பவராம்
ஆசாரம் ஏதுமின்றி – ஒரு
அருகம்புல் போட்டாலே
பாசமுடன் ஓடிவந்து – நம்
பாபமெலாம் எரிப்பவராம்
ஓம்ஓம்ஓம் ஒலிகேட்டு – மன
ஒளிதந்தே அருள்பவராம்
ஆம்ஆம்ஆம் நாமெல்லாம் – அவர்
அன்பான பிள்ளைகளாம்.
(இன்று 13.09.2018 ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி)




