பயமற்ற நிலை: ஆச்சார்யாள் அருளுரை!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் ஸ்ரீசிருங்கேரி மகிமை
bharathi theerthar
bharathi theerthar

சங்கரருடைய காலத்திற்கு முன்பு அவ்வளவு சிறப்பாக அத்வைத தத்துவத்திற்கு விளக்கம் கூறப்படவில்லை. அவற்றில் உள்ள ஸூக்ஷ்மமான கருத்துக்களை மக்களுக்கு புரியவைக்க வேண்டிய ஒரு வேலை சங்கரருக்கு இருந்தது.

பிரபஞ்சம் முழுவதும் மாயையே தவிர வேறில்லை. மாயை அவித்யையால் தோன்றுகிறது. பரமார்த்த தத்துவம் ஒன்றுதானே தவிர இரண்டில்லை. இதுதான் சங்கரரால் வலியுறுத்தப்பட்டது.

த்வைதத்தினாலே மனிதனுக்கு பயம்தான் ஏற்படும். இரண்டில்லா நிலையில்தான் பயமின்மையும் உண்மையையும் பெற முடியும். சாதாரணமாக. தனக்கு சமமான இன்னொருவன் இருப்பதைக் கண்டால் ஒருவனுக்கு பயம் ஏற்படுவதைப் பார்க்கிறோம்.

அந்த மற்றொருவனால் தான் தாக்கப்படலாம் என்று அவனுக்குப் பயமிருக்கும். எதிராளி இல்லையெனில் அவனுக்குப் பயமிருக்காது. அதேபோல் தான் பரமார்த்த தத்துவத்திலும்,

யதா ஹ்யேவை ஏதஸ்மின்னுதரமந்தரம் குருதே I
அத தஸ்ய பயம் பவதி I
என்று ச்ருதி கூறுகின்றது.

இங்கே “உதரம்” என்பது வயிற்றைக் குறிக்கவில்லை. “கொஞ்சங்கூட” (உத்+அரம்) என்பதையே குறிக்கின்றது. பரமாத்மா “இரண்டு” என்ற பாவனையில் பார்த்தால் பயம்தான் ஏற்படும்.

இரண்டற்ற நிலையில்தான் பயமற்ற நிலை ஏற்படும். அதாவது அங்கே இரண்டு பரமாத்மாக்களில்லை. பேதம் இன்மையே பயமின்மையைக் கொடுக்கும். அதுவே மோக்ஷமாகும். இந்த அத்வைத நிலையை அடையவில்லை என்றால் மோக்ஷம் இல்லை. அத்வைத நிலையே பயமற்ற தன்மைக்கு வழி வகுக்கும். இருப்பது ஒன்றுதான் என்பதே உண்மை.

ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.