Tamil News large 3111270 - 2026

ஸ்மார்ட் சிட்டி கோவையில் மழை நீர் வடிந்து செல்ல வழியில்லாமல் அவதிப்படும் மக்கள்..

கோவை

ஸ்மார்ட் சிட்டி கோவை நகரில் இருநாட்களாக தொடர்ந்து பெய்த கனமழையால், சாலைகளில் மழை நீரும், சாக்கடை கழிவும் தேங்கியது. பல கோடி ரூபாய் செலவழித்து, ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள், மழைநீர் வடிந்து செல்வதற்கான வழிமுறைகளை, சரியாக செய்யாததால் ஒவ்வொரு மழையிலும் மக்கள் அவதிப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.

கோவையில் நேற்று முன்தினம் இரவு, கனமழை பெய்தது. விடிய, விடிய பெய்த மழை நேற்று காலை ஓய்ந்தது. நேற்று மாலை 3:00 மணிக்கு, மீண்டும் விஸ்வரூபமெடுத்து, மாலை 4:30 மணி வரை கொட்டித்தீர்த்தது. நகரில் தாழ்வான இடங்கள், மேம்பாலங்களின் கீழ் பகுதிகளில், மழைநீர் சூழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கோவை நேரு விளையாட்டு அரங்க வளாகத்தில் உள்ள, வணிக நிறுவனங்களுக்குள் மழை நீர் புகுந்தது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் தேங்கியது. பொன்னையராஜபுரம் அருகே உள்ள, முத்தண்ணன் குளத்திலிருந்து செல்வசிந்தாமணி குளத்திற்கு செல்லும் மழைநீர் கால்வாயிலிருந்து வெள்ளம் வெளியேறி, பிருந்தாவன் காலனியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்தது.

புலியகுளம் மசால் லேஅவுட்டிலுள்ள, குடியிருப்பு பகுதிக்குள் மழை நீர் நுழைந்தது. அதே போல் திருச்சி சாலை சுங்கம் அருகேயுள்ள, தாழ்வான பகுதியிலுள்ள குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்தது.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், வடிவமைக்கப்பட்ட ரேஸ்கோர்ஸ் ரவுண்டானா, வாலாங்குளம், பெரியகுளம் பகுதிகளில் மழைநீர் தேங்கியதால், மக்கள் அவதிக்குள்ளாயினர். பல கோடி ரூபாய் செலவழித்து, ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள், மழைநீர் வடிந்து செல்வதற்கான வழிமுறைகளை, சரியாக செய்யாததால் ஒவ்வொரு மழையிலும் மக்கள் அவதிப்படுகின்றனர்.

Tamil News large 3111270 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.