தில்லி நீதிமன்றத்தை அணுக கார்த்தி சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

இந்தியா சற்றுமுன்

புது தில்லி:

அமலாக்கத்துறை தனக்கு அனுப்பிய சம்மனை ரத்து செய்யக் கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவில், அவர் உயர் நீதி மன்றத்தை அணுகலாம் என்று கூறி வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கியது உச்ச நீதிமன்றம்.

ஐ.என்.எக்ஸ்., மீடியா பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்ய வேண்டும் என்றும், சிபிஐ தொடர்ந்த வழக்கில் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அதிகாரமில்லை என உத்தரவிடக் கோரியும் கார்த்தி சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, இந்த வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் தில்லி உயர் நீதிமன்றத்தை அணுகலாம் எனக்கூறி, வழக்கை திரும்பப் பெற்று கொள்ள அனுமதி வழங்கியது. மேலும், கார்த்தி சிதம்பரம் வழக்கை விசாரிக்க உரிய அமர்வை உடனே அமைக்குமாறும் தில்லி உயர்நீதிமன்றத்துக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

முன்னதாக, தங்களின் விசாரணையில் எந்த விதத்திலும் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று கூறி, சிபிஐ., கார்த்தி சிதம்பரத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த உத்தரவிடக் கோரி சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியானது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.