nirmala seetharaman in viruthunagar district indoor sports - 2026

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

மதுரை சற்றுமுன் தமிழகம் வணிகம்
nirmala seetharaman in viruthunagar district indoor sports complex - 2026

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள சென்னிலைகுடியில் பரமக்குடி கூட்டுப் பண்ணையியல் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கி ஆதரவுடன் அமைக்கப்பட்ட சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில் திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு முன்னிலையில் மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் திறந்து வைத்து உற்பத்தி பணிகளை பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், இங்கிருந்து விருதுநகர் மிளகாய் மதிப்பு கூட்டப்பட்டு ஏற்றுமதிக்கு உகந்த மிளகாய் என சான்று பெற்றுள்ளது. இதற்காக விவசாயிகளுக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.பூச்சி மருந்துகள் குறைவாக பயன்படுத்துவதால் அமெரிக்காவுக்கும் நம்மால் ஏற்றுமதி செய்ய முடியும் என்றும் உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன் என்றார்.மேலும் விவசாயிகளுக்கு விவசாயத்தின் மூலம் மட்டுமின்றி உள்ளூரில் உள்ள இது போன்ற நிறுவனங்களில் விவசாயம் சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றுவதாலும் வருமானம் கிடைக்கிறது. இந்த நிறுவனம் ஒரு முன் மாதிரி நிறுவனமாக உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.கிராமப்புற தொழில்முனைவு மற்றும் வாழ்வாதார மேம்பாட்டிற்கு ஆதரவளிப்பதில் சிட்பியின் (SIDBI) அர்ப்பணிப்பையும் அவர் பாராட்டினார்.

“2036 ஒலிம்பிக் போட்டிக்கு இப்போதே தயாராக வேண்டும்; சாம்பியன்களை உருவாக்கட்டும்!” – உள் விளையாட்டு அரங்கத் திறப்பு விழாவில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை!

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மத்திய அரசு மற்றும் எஸ்பிஐ வங்கியின் நிதிப் பங்களிப்பின் கீழ் ரூ. 4.50 கோடி மதிப்பில் அதிநவீன உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார்.

இந்த விழாவில் முன்னாள் தமிழ்நாடு நிதி அமைச்சரும், திருச்சுழி சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசு, ற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா உள்ளிட்டப் பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆற்றிய உரையில்,

“பிரதமர் நரேந்திர மோடி 2014-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே, விளையாட்டுத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். ஆரம்பத்தில் ‘டாப்’ (TOPS – Target Olympic Podium Scheme) என்ற திட்டத்தை அறிவித்தார். ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய இளைஞர்கள் பதக்க மேடையில் முதல் மூன்று இடங்களைப் பிடித்துப் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதற்காக, சர்வதேசத் தரத்திலான பயிற்சிகளைத் நேரடியாக வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம். இதன் ஒரு பகுதியாகவே நாடு முழுவதும் விளையாட்டு அரங்குகள் கட்டப்பட்டு வருகின்றன.

2024-இல் பிரதமர் மோடி மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்ற பிறகு, நம் நாட்டில் மீண்டும் காமன்வெல்த் போட்டிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளார். 2010 காமன்வெல்த் போட்டிகளில் நடந்த ஊழல் முறைகேடுகளால் அந்தப் போட்டியின் மீதே மக்களுக்கு ஒரு கசப்புணர்வு ஏற்பட்டது. ஆனால், தற்போதைய அரசு அந்தத் தவறுகளைத் தவிர்த்து, வெளிப்படைத்தன்மையுடன் காமன்வெல்த் போட்டிகளைத் தாயகத்திற்குக் கொண்டு வர முன்னேற்பாடுகளைச் செய்து வருகிறது.

அனைத்திற்கும் மேலாக, 2036-ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளைப் இந்தியாவில் நடத்துவதற்கான அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் அதிரடி முயற்சிகளையும் பிரதமர் எடுத்து வருகிறார்.”

“இந்திய இளைஞர்களை விளையாடத் தூண்டும் விதமாக ‘கேலோ இந்தியா’ (Khelo India) திட்டம் கொண்டு வரப்பட்டது. மேலும், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தங்களது தொகுதிகளில் உள்ள கிராமப்புற மாணவர்களுக்காக ‘சான்சத் கேள் கும்ப்’ (Sansad Khel Kumbh) என்ற விளையாட்டுத் திருவிழாவை நடத்த வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார். வட இந்தியாவில் கும்பமேளா, தென்னிந்தியாவில் மகாமகம் மற்றும் புஷ்கரம் போன்ற ஆன்மீகத் திருவிழாக்கள் எப்படிப் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படுகிறதோ, அதேபோல விளையாட்டையும் ஒரு கொண்டாட்டமாக மாற்ற வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

தமிழகத்தில் மாற்று அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அரசின் இந்தத் திட்டத்திற்குப் பெரிதாக ஒத்துழைப்பு தராததால் கிராமப்புற மாணவர்களுக்கான இந்த வாய்ப்பு தடைப்பட்டது வருத்தமளிக்கிறது. விளையாட்டு என்பது கட்சி, அரசியல் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டது. இளைஞர்களின் எதிர்காலத்திற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.”

“விருதுநகர் மாவட்டம் என்பது மத்திய அரசின் ‘ஆஸ்பிரேஷனல் டிஸ்ட்ரிக்ட்’ (Aspirational District – முன்னேறத் துடிக்கும் மாவட்டங்கள்) பட்டியலில் உள்ள ஒரு மாவட்டமாகும். இங்குள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம், ஜல் ஜீவன் இயக்கம் (Jal Jeevan Mission) மூலமாகக் குடிநீர் வசதி, மருத்துவமனை மேம்பாடு மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கான சத்துணவுத் திட்டங்கள் முறையாகக் கிடைக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது.

ஆனால், இந்த ஆஸ்பிரேஷனல் மாவட்ட மேம்பாட்டில் விளையாட்டுத் துறைக்கான பங்களிப்பு சற்று குறைவாக இருப்பதாக எனக்குத் தோன்றியது. அதன் விளைவாகவே, எஸ்பிஐ வங்கியிடம் பேசி, இந்த அரசு கலைக் கல்லூரியில் உடற்பயிற்சிக் கூடம், வாலிபால், த்ரோபால் மற்றும் நவீன பிக்கல்பால் போன்ற அனைத்துப் போட்டிகளுக்கும் உகந்த உள் விளையாட்டு அரங்கத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளோம்.

“ஒரு விளையாட்டு அரங்கத்தை நிதி கொடுத்துக் கட்டி முடிப்பது எளிது. ஆனால், அதைப் பராமரிப்பது (Maintenance) மிகக் கடினம். இந்த அரங்கம் சிறப்பாகப் பராமரிக்கப்பட வேண்டுமானால், அதற்குத் தனிப்பட்ட முறையில் நானும், அமைச்சர் தங்கம் தென்னரசுவோ அல்லது எஸ்பிஐ அதிகாரிகளோ தினமும் இங்கே வர முடியாது.

அதேபோல், கல்லூரி நிர்வாகமும் பயிற்சியாளர்களும் (Coaches) மாணவர்களுக்கு முறையான, திட்டமிட்ட பயிற்சிகளை வழங்கி, மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் அவர்களைப் பங்கேற்கச் செய்ய வேண்டும். இங்கிருந்து தேசிய அளவிலான அணிகளுக்கு மாணவர்கள் தேர்வாக வேண்டும்.”

“திருச்சுழி என்ற உடனே உலகளவில் அனைவருக்கும் ரமணர் பிறந்த புண்ணிய பூமிதான் நினைவுக்கு வரும். அவரது ஆன்மீகச் சிந்தனைகள் இன்றும் உலகை வழிநடத்துகின்றன. அதேபோல், இனிவரும் காலத்தில் விளையாட்டுத் துறை என்று எடுத்தால் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டிற்கும் ‘திருச்சுழி’ தான் நினைவுக்கு வர வேண்டும்.

அன்று கேரளாவில் பி.டி.உஷா என்ற ஒற்றை ஓட்டப்பந்தய வீராங்கனை ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை சேர்த்தார். அதேபோல, இந்தத் திருச்சுழி மண்ணிலிருந்தும் சர்வதேச அளவிலான சாம்பியன்களும், ஒலிம்பிக் பதக்கம் வெல்லும் வீரர்களும் உருவாக வேண்டும். இதுவரை ‘விருதுநகர் என்றால் வியாபாரம்’ என்றுதான் உலகிற்குத் தெரியும்; ஆனால் இனி, ‘விருதுநகர் பிள்ளைகள் விளையாட்டிலும் சாம்பியன்கள்’ என்ற புதிய பெருமையைப் பெற்றுத் தர வேண்டும்” என பேசினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.