தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பலியானோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட தகவல்: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் நடைபெற்ற சாலை விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்த சாலை விபத்தில் அகால மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதல்படி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை அதிகாரிகளுக்கும், தருமபுரி மாவட்ட நிர்வாகத்துக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்களுக்கு தருமபுரி மாவட்ட மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையை அமைச்சர்கள் பழனியப்பன், வி.செந்தில்பாலாஜி ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், சிறு காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்க முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
- Home
- உள்ளூர் செய்திகள்
- ஒகேனக்கல் பேருந்து விபத்தில் இறந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் உதவி
