கும்ப ராசி : அவிட்டம்- 3, 4 ம் பாதங்கள், சதயம், பூரட்டாதி- 1,2,3 ம் பாதங்கள் முடிய உள்ள நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கான பலன்கள்…
எதிலும் மனசாட்சிக்கு விரோதமான காரியத்தை செய்யாத கும்ப இராசி வாசகர்களே, நீங்கள் குடும்பபெருமையைக் காப்பவர்கள். பெரியவர்களை மதிப்பவர்கள். சமுதாய மாற்றத்திற்கு பாடுபடுபவர்கள். எப்படி இருக்கப் போகிறது இந்த 2015ம் ஆண்டு: இந்த ஆண்டில் இனிய பயணங்களைச் செல்வீர்கள். உங்களின் ஆற்றல் அதிகரிக்கும். பகைவர்களை வெற்றி கொள்வீர்கள். உடல் நலம் சீராகும். வருமானம் சிறப்பாக இருக்கும். உங்களின் பெருந்தன்மையை அனைவரும் பாராட்டுவார்கள். அதேநேரம் ஆடம்பரக் கேளிக்கைகளுக்காக செலவு செய்வதைக் குறைத்துக் கொள்ளவும். சில நேரங்களில் யோசிக்காமல் பேசி வம்பில் மாட்டிக் கொள்ள நேரலாம். “யா காவாராயினும் நா காக்க’ என்ற வள்ளுவர் வாய் மொழியை எப்போதும் நினைவில் நிறுத்துதல் நலம் பயக்கும். மறைமுக எதிரிகளிடம் கவனமாக இருக்கவும். உங்கள் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். மற்றபடி உங்களின் பதவியால் சில ஆதாயங்கள் கிடைத்து, மகிழ்ச்சி உண்டாகும். இதன் மூலம் பொதுநலக் காரியங்களுக்குச் செலவு செய்வீர்கள். திட்டமிட்ட வேலைகளைத் தள்ளி வைக்க வேண்டிய சூழ்நிலை, சில நேரங்களில் உருவாகலாம். எனவே உங்கள் காரியங்களில் கவனமாக இருக்கவும். மற்றபடி நேர்மையான எண்ணங்களால் உங்களின் வாழ்க்கைத் தரம் உயரும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்று நடத்த நல்வாய்ப்பு உருவாகும். இதனால் மனதில் இருந்த காரணமில்லாத வருத்தங்களும், குழப்பங்களும் மறையும். உங்கள் பணிகளை விரைவில் செய்து முடிப்பீர்கள். சமூகத்தில் உங்களின் மதிப்பு, மரியாதை உயரும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். உங்களின் எண்ணங்களும், செயல்களும் உங்களுக்கு வாழ்வில் உயர்ந்த இடத்தைப் பெற்றுத் தரும். கடினமாக உழைக்க வைக்கும் ராகு பகவான், அதற்கேற்ற பெரும் பலனைத் தருவதற்கும் தயங்க மாட்டார். அதேநேரம் ஓய்வெடுக்க முடியாமல் போவதால் உடலில் சோர்வு உண்டாகும். எனவே சரியான நேரத்தில் ஆகாரத்தை உட்கொண்டு உடல் வலிமையைத் தக்க வைத்துக் கொள்ளவும். வாகனங்களுக்கு பராமரிப்புச் செலவுகள் செய்ய நேரிடும். தவிர்க்க இயலாத காரணங்களால் சகோதர, சகோதரிகளுக்குப் பணம் செலவழிப்பீர்கள். ஆயின் புதியவர்களின் நட்பால் கைப்பொருளை இழக்க நேரிடும் என்பதால் அதிக அறிமுகமில்லாதோரிடம் கவனமாக இருக்கவும். சுக போக வசதிகளை அனுபவிப்பீர்கள். பயணங்களில் அதிர்ஷ்ட தேவதை தரிசனம் தருவாள். இதனால் பொருளாதார வளமும், சேமிப்பும் உயரும். அரசாங்க உதவிகளும் கிடைக்கும். உங்களின் ஆசைகள் ஒன்றன் பின் ஒன்றாகப் பூர்த்தியடையும். உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் சிறப்பாக முடியும். எதிர்பார்த்த பதவி உயர்வும், ஊதிய உயர்வும் பெறுவீர்கள். சிலருக்கு விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவாலும், நட்பாலும் அலுவலகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும். சில முக்கியப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பீர்கள். மற்றபடி உங்கள் வேலைகளை முன் கூட்டியே யோசித்துச் செய்தால் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். வியாபாரிகள் கூடுதல் எச்சரிக்கையுடன் வாணிபத்தில் ஈடுபடவும். எதையும் ஒரு முறைக்கு இரு முறை யோசித்துச் செயல்படுவது அவசியம். மற்றவர்களிடம் பண விஷயங்களில் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளவும். மற்றபடி வியாபாரத்தை சீரமைப்பதற்கு நீங்கள் சுயமாக மேற்கொள்ளும் முயற்சிகள் நிச்சயம் வெற்றியடையும். அரசியல்வாதிகள், மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆனால் அதன் முழுப் பலன்களையும் அனுபவிக்க இயலாத அளவிற்கு மற்றவர்களால் சிறு குறுக்கீடுகளும் தோன்றும். எனினும் மனம் தளராமல் எதிரிகளைச் சமாளிப்பீர்கள். கடினமான வேலைகளையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். இதனால் புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். பயணங்களால் நன்மைகள் உண்டாகும். தொண்டர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையில் செல்லும். புதிய நட்புகளால் நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். சக கலைஞர்களும், ரசிகர்களும் உங்களுக்கு நிறைவான ஆதரவு தருவார்கள். வருமானமும் சீராகவே இருக்கும். பெண்மணிகள், மன நிம்மதியைக் காண்பீர்கள். தர்ம காரியங்களிலும், தெய்வ வழிபாட்டிலும் ஈடுபடுவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான ஆரம்பகட்ட வேலைகளைத் துவக்குவீர்கள். குடும்பத்தினருடன் சந்தோஷமாகப் பொழுதைக் கழிப்பீர்கள். கணவருடனான ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பப் பொறுப்புகளை திருப்திகரமாக நிறைவேற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். மாணவமணிகள் உற்சாகமான மனநிலையுடன் கல்வியில் ஈடுபடுவீர்கள். உடல் வலிமை பெற தக்க பயிற்சிகளில் ஈடுபடவும். வருங்காலத் திட்டங்களுக்காக அடித்தளம் போடுங்கள். விளையாட்டுகளிலும் வெற்றிகளைப் பெறுவீர்கள். உங்களின் தன்னம்பிக்கை படிப்படியாக உயரும். பரிகாரம்: சனிக் கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும். முடிந்தால் ஒருமுறை திருநள்ளாறு சென்று வரவும். சனி அஷ்டகம் பாராயணம் செய்யலாம். எருக்கம்பூவை அருகிலிருக்கும் சிவனுக்கு அர்ப்பணித்து வரவர உங்களின் வாழ்வில் முக்கியமான காரியங்கள் அனைத்தும் நடந்தேறும்.