air conditioner ac handling - 2026

வீட்டில் ஏர் கண்டிஷனர் வைத்திருப்பது ஒரு காலத்தில் ஆடம்பரமான விஷயமாக கருதப்பட்டது. ஆனால் புவி வெப்பமயமாதல் காரணமாக இப்போது ஏசி என்பது ஒவ்வொரு வீடு மற்றும் வணிக வளாகத்திலும் அத்தியாவசிய தேவையாக இருக்கிறது.

இந்த நேரத்தில்தான் ஏசி பயன்படுத்துவதில் புதிய நடைமுறையை கொண்டுவர திட்டமிட்டிருக்கிறது மத்திய அரசு.

மத்திய அரசு திட்டம்

வீடுகள், வணிக வளாகங்களில் தற்போது பயன்படுத்தப்படும் ஏசி-க்களில் குறைந்தபட்சமாக 16 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் வரை நமக்கு தேவையான வகையில் வெப்ப நிலையை வைத்துக் கொள்ளலாம் என்ற வசதி இப்போது இருக்கிறது.

இதை மாற்றி குறைந்தபட்சமாக 20 டிகிரி செல்ஷியஸ் அளவு மற்றும் அதிகபட்சமாக 28 டிகிரி அளவுக்கு இடையே மட்டுமே வெப்ப நிலையை வைத்துக்கொள்ளும் வகையில் மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக வீட்டு உபயோகப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர்லால் கட்டார் இதை தெரிவித்துள்ளார்.

ALSO READ:  BRICS: ரஷ்ய அதிபர் புடினுக்கு மோடி அளித்த தமிழர் ‘நிர்வாகப் பொக்கிஷ’ பரிசு!

வீட்டில் நமக்கு வசதியான வெப்ப நிலையில் ஏர் கண்டிஷனரை பயன்படுத்துகிறோம். இதில் மத்திய அரசு ஏன் தலையிட வேண்டும் என்ற கேள்வி பலருக்கும் எழலாம்.

ஆனால், நாட்டின் மின் பயன்பாட்டை வைத்து பார்க்கும்போது இதில் அரசுக்கு ஏற்பட்டுள்ள கவலைக்கான காரணத்தை அறிந்துகொள்ள முடியும்.

இந்தியாவைப் பொறுத்தவரை கோடைக் காலங்களில்தான் மின் தேவை அதிகமாக இருக்கிறது. இதற்கு காரணம் ஏர் கண்டிஷனர்கள்.

இந்தியாவில் சுமார் 100 மில்லியன் ஏர் கண்டிஷர்கள் பயன்படுத்தப்படுவதாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறையின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதோடு ஆண்டுதோறும் புதிதாக 15 மில்லியன் ஏர் கண்டிஷனர்கள் வாங்கப்பட்டு வீடு மற்றும் வணிக வளாகங்களில் பொருத்தப்படுவதாகவும் இந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

50 கிகாவாட்ஸ் மின்சாரம்

கோடை காலத்தில் ஏர் கண்டிஷனர்களைப் பயன்படுத்துவதற்காக மட்டும் சுமார் 50 கிகாவாட்ஸ் மின்சாரம் செலவழிக்கப்படுவதாக கூறும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறையின் புள்ளிவிவரம்.

இதில் பலரும் அதீத குளிர்ச்சிக்காக 16 டிகிரி செல்ஷியஸ் அளவில் ஏர் கண்டிஷனர்களை பயன்படுத்துவதால் மின் தேவையின் அளவு மேலும் அதிகரிப்பதாக கூறுகிறது.

ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!

மாறாக ஏர் கண்டிஷனர்களின் வெப்ப நிலையை 1 டிகிரி செல்ஷியஸ் வரை கூட்டி வைத்தால் மின் தேவையில் 6 சதவீதம் வரை சேமிக்கலாம் என்றும் அந்த புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

ஏர் கண்டிஷனர்களின் வெப்ப நிலையில் கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவதன் மூலம், 2035-ம் ஆண்டுக்குள் 60 கிகாவாட்ஸ் வரை மின்சாரத்தை சேமிக்க முடியும் என்றும், அதனால் புதிய மின் நிலையங்களுக்கான 7.5 டிரில்லியன் ரூபாய் முதலீட்டை சேமிக்க முடியும் என்றும் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆய்வை மேற்கோள் காட்டி மத்திய அரசு தெரிவிக்கிறது.

கடந்த கோடைக் காலத்தில் நாட்டின் மொத்த மின் தேவையின் அளவு 250 கிகாவாட்டாக இருந்தது. அது இந்த ஆண்டில் 270 கிகாவாட்டாக அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதிலும் ஏசியின் பயன்பாடு முக்கிய பங்கை வகிக்கிறது. இதுபோன்ற சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டே ஏர் கண்டிஷனர்களின் குறைந்தபட்ச வெப்ப நிலையை 20 டிகிரி செல்ஷியஸாக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

22 டிகிரி செல்ஷியஸ்தான் நல்லது

அரசின் கட்டுப்பாடுகள் ஒருபுறம் இருக்க, 22 டிகிரி செல்ஷியஸ் முதல் 28 டிகிரி செல்ஷியஸ் வரையிலான வெப்பநிலையில் ஏசியைப் பயன்படுத்துவதுதான் உடல் நலனுக்கு நல்லது என்று மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ALSO READ:  FCRA சட்டம்; வெளிநாட்டு சதிகளும் உள்நாட்டு அரசியலும்!

வீட்டுக்குள் 22 டிகிரிக்கு குறைந்த வெப்பநிலையில் இருந்துவிட்டு பின்னர் வெளியில் வந்தால் 35 டிகிரி செல்ஷியஸுக்கும் அதிகமான வெப்ப நிலையை உங்கள் உடல் தாங்காது.

அதனால் முடிந்தவரை 22 டிகிரி செல்ஷியஸுக்கு அதிகமான வெப்பநிலையை ஏசியில் செட் செய்துகொள்வது நல்லது என்பது அவர்களின் கருத்தாக உள்ளது.

உடல்நிலைக்கு நல்லதோ இல்லையோ, குறைந்த அளவுக்கு ஏசியைப் பயன்படுத்தினால், அது உங்கள் பர்ஸுக்கு நல்லது என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். இதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம்

  • இளங்கோவன் திருநாவுக்கரசு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending