மிளகுக் குழம்பு – கும்பகோணத்தான் ரெசிபி
Thanks- Srinivasan Uppili
மறக்காதீர்கள். ஆவி பறக்கும் சாதத்தில்தான் இந்த மிளகுக் குழம்பைப் பிசைந்து சாப்பிட வேண்டும். அப்போதுதான் முழுசாக ருசிக்கும். கூடவே, கொஞ்சம் நெய் விட்டுக் கொள்ளவும் மறக்காதீர்கள். இல்லையென்றால் விக்கித் தீர்த்து விடுவீர்கள்.
எலுமிச்சம்பழ அளவுக்குப் புளி, ஐம்பது கிராம் மிள்கு, ஐந்தாறு மிளகாய் வத்தல், உளுத்தம் பருப்பு ஐம்பது கிராம், பெருங்காயம் சிறிய துண்டு எடுத்துக் கொள்ளவும்.
காப்பர் பாட்டம் வாணலியை அடுப்பில் ஏற்றி நல்லெண்ணெய் விட்டுக் கொள்ளுங்கள். எண்ணெய் சூடேறியதும் முதலில் போட வேண்டியது பெருங்காயம். உளுத்தம் பருப்பும், மிளகும் பிறகு போடவும். உளுத்தம் பருப்பு சிவந்து, மிளகு வெடிக்க ஆரம்பிக்கும்போது, புளியை அப்படியே அதில் போட்டு, மிளகாய் வத்தலையம் போட்டு வறுத்துக் கொள்ளுங்கள். கூட இரண்டு கறிவேப்பிலை போட்டுக் கீழே இறக்கி விடுங்கள். மிக்ஸியில் இரண்டு தம்ளர் தண்ணீர் சேர்த்து இதை நைசாக அரையுங்கள்.
வாணலியில் மீண்டும் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு போடுங்கள். அது வெடித்ததும், அரைத்து வைத்த விழுதைப் போட்டு, தேவையான உப்பு, அரை ஸ்பூன் மஞ்சள் பொடி போட்டு கெட்டியாகக் கொதித்து இறுகி வரும்போது இறக்கி விட்டால், இதற்குப் பேர்தான் மிளகுக் குழம்பு.
மிள்கு குழம்பு முக்கால் கொதி வந்ததும், இருநூறு கிராம் பூண்டை வதக்கி அதில் போட்டு நன்றாக கொதிக்க விட்டு இறக்கவும். இது மிளகு பூண்டு குழம்பு.. இதேபோல் முருங்கைக் காயிலும் செய்யலாம்


