ஆன்லைன் வகுப்பு: கண் பாதிப்பு.. தமிழக அரசு அறிக்கை அளிக்க கால அவகாசம்! உயர் நீதிமன்றம்!

Published:

HIG COURT CHANNAI

ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு கண் பாதிப்பு ஏற்படுமா? – தமிழக அரசு அறிக்கை அளிக்க கால அவகாசம் வழங்கியது உயர் நீதிமன்றம்

பள்ளி மாணவ, மாணவியருக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதை முறைப்படுத்த விதிகள் வகுப்பது குறித்து ஜூலை 6-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், மாணவர்களுக்கு ஏற்படும் கண் பாதிப்பு குறித்து அறிக்கை அளிக்கும்படி தமிழக அரசுக்கும் அவகாசம் வழங்கி உத்தரவிட்டது.

கரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் திறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நடப்புக் கல்வியாண்டுக்கான பாடங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகின்றன.

ஆன்லைன் மூலம் வகுப்புகளில் கலந்துகொள்ள மாணவ, மாணவியர் முயலும்போது ஆபாச இணையதளங்களால் அவர்களின் கவனம் சிதைகிறது. அந்த இணையதளங்களை மாணவ, மாணவியர் அணுக இயலாத வகையில் விதிகளை வகுக்கும் வரை ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை விதிக்கக் கோரி, சென்னை புத்தகரம் பகுதியைச் சேர்ந்த சரண்யா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

இதேபோல, ஆன்லைன் வகுப்புகளை மொபைல் மூலமும், லேப்டாப் மூலமும் பார்ப்பதால் மாணவர்களின் கண்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்தத் தடை விதிக்க வேண்டும் என்றும், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2 மணி நேரம் மட்டும் வகுப்புகள் நடத்த உத்தரவிட வேண்டும் எனக்கோரியும் விமல் மோகன் என்பவரும் பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார்.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

இந்த வழக்கில், மாணவர்களுக்கு ஏற்படும் கண் பாதிப்பு குறித்து கண் மருத்துவமனை டீன் அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் இன்று (ஜூன் 25) விசாரணைக்கு வந்தது.

அப்போது, எந்த விதிகளும் வகுக்கப்படாமல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாக மனுதாரர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்துவதற்கு விதிகள் வகுப்பது தொடர்பாக உள்துறை மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கருத்துகளைப் பெற்று தெரிவிக்க இரண்டு வார கால அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

அதேபோல, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, மாணவர்களின் கண் பாதிப்பு குறித்து கண் மருத்துவமனை டீன் அறிக்கை அளிக்க ஒரு வார கால அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசுத்தரப்பு வழக்கறிஞர் சி.முனுசாமி கோரிக்கை விடுத்தார்.

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை கோரிய அனைத்து வழக்குகளையும் ஜூலை 6-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

Related articles

Recent articles

spot_img