ஜாக்டோ ஜியோ… கைதுப் படலம் துவங்கியது! நள்ளிரவிலும் நடந்த நாடகங்கள்!

கல்வி சென்னை தமிழகம்
teachers strike - 2026

எச்சரிக்கையை மீறி போராட்டத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் ஜாக்டோ ஜியோ அமைப்பினரை தேடித் தேடி கைது செய்யும் படலத்தை தொடங்கியிருக்கிறது அரசு. நள்ளிரவிலும் கைதுகள் தொடர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றம் ஜாக்டோ ஜியோ அமைப்பினரை பணிக்குத் திரும்பவேண்டும் என்று உத்தரவிட்டு, அவர்கள் அவ்வாறு திரும்பாவிட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் வேலை, அதில் நீதிமன்றம் எதுவும் செய்ய முடியாது என்று கூறிவிட்டது. இந்நிலையில் கைதுப் படலத்தை தொடங்கியிருக்கிறது அரசு.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் நேற்று 4ஆவது நாளாக சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது காவல் துறையினர் வளாகத்தின் கதவுகளை மூடினர். ஊழியர்கள் காவல் துறை தடுப்பையும் மீறி காமராஜர் சாலையில் மறியலில் ஈடுபட்டபோது, ஆயிரக்கணக்கானோரை காவல் துறை கைது செய்தது.

இந்நிலையில் இரவு ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்களை மட்டும் ரிமாண்ட் செய்த போலீஸார், அனைத்து மாவட்டங்களிலும் போராட்டத் தலைவர்களைக் குறி வைத்து ஒரே நேரத்தில் கைது செய்து சிறைக்குக் கொண்டு சென்றனர்.

வேலூரில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் 6பேர் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப் பட்டனர். நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் 6பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட 6 பேரையும் திங்கள் கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு இடப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.