கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

Published:

201805031533014928 hindu Marriage best days SECVPF - 2026

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

ஆனால் காலப்போக்கில் பல மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. கட்டுப்பாடுகளையும் சம்பிரதாயங்களையும் விதிமுறைகளாகப் பார்க்காமல் அடக்குமுறையாகக் கருதும் நிலை உள்ளது. சுதந்திரம்  என்ற பெயரில் விழுமியங்களைக் கைவிடுவதைப் பரவலாகக் காண  முடிகிறது.

திருமண அமைப்பு சிதைந்து வரும் நிலையைக் காண்கிறோம். நிச்சயதார்த்த விழாக்களைத் தேவையற்ற ஆடம்பரத்தோடு நடத்துவது சர்வ சாதாரணமாகிவிட்டது.  நிச்சயித்த திருமணத் தேதி வருவதற்கு முன்பே உறவை முறித்துக் கொள்வதும் சகஜமாகி விட்டது. எந்த சாஸ்திர நூலிலும் இல்லாத நிச்சயதார்த்த ஆடம்பரம் எதற்காக? திருமணமான சில நாட்களிலேயே சின்னச் சின்ன காரணங்களுக்காகப் பலர் பிரிந்து விடுறார்கள். பெரியவர்கள் அறிவுரை கூறவோ, சமரசம் செய்து வைக்கவோ முடியாத சூழ்நிலை உள்ளது. 

சம்பிரதாயத்தின் மீதும் கலாச்சாரத்தின் மீதும் மரியாதை குறைந்து வருவது கவலையளிக்கிறது. திருமண அமைப்பின் மேல் நம்பிக்கை குறைந்து, திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவில் ஈடுபடும் ஆணும் பெண்ணும் சமுதாய மரியாதையைச் சிதைத்து வருகிறார்கள். டேட்டிங், கோ லிவிங், லிவ் இன் ரிலேஷன்ஷிப் என்று புதிய சொற்கள் உருவாகி வருகின்றன.  உள்ளூர் மொழிகளில் இவற்றுக்கு ஏற்ற மொழிபெயர்ப்புகளை உருவாக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்படுகின்றன.

கட்டுப்பாடுகளை அடக்குமுறை என்று நிராகரித்தால்,  எல்லை மீறும் செயலை எப்படி அழைப்பது? கரையை மீறும் கடல் அழிவைத்தானே விட்டுச் செல்கிறது?  பெருகிவரும் பொருளாதார வளமும் வருமானமும் சிற்றின்ப நாட்டத்தை அதிகரிக்கின்றன. யோகா,  புலனடக்கம்,  தியானம், சுயபரிசோதனை போன்ற கருத்துகள் பழமைவாதிகளின் உளறலாக நிராகரிக்கப்படுகின்றன.  இவற்றால் கிடைக்கும் அமைதி எட்டாக் கனியாகி வருகிறது.

ALSO READ:  செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

புலன்களை சுகப்படுத்துவதே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு  பாரம்பரிய சமூகக் கண்ணியத்தைத் தூக்கியெறிந்துவிட்டு  மதுவுக்கும் போதைப் பொருளுக்கும்  அடிமையாகும் ஆண்களும் பெண்களும் பெருகி வருகின்றனர்.

“உடலால் ஆணுக்கு நெருக்கமாகும் பெண் மரியாதைக்குரிய நிலையிலிருந்து விலகிச் செல்கிறாள்” என்ற நாவலாசிரியர் ஒருவரின் கூற்று இங்கே நினைவுக்கு வருகிறது, ஆடை, அலங்காரம் குறித்து ஏதேனும் குறிப்பிடப்பட்டால், எதிர்ப்புக் கும்பல்கள் கடும் கண்டனத்தை வெளிப்படுத்துகின்றன. அப்படியிருந்தும்  பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையவில்லை.

இந்தக் கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறைக்குக் கனமான விலையைச் செலுத்த வேண்டியுள்ளது. உண்பதிலும் அருந்துவதிலும் அளவுக்குமீறி ஈடுபடும் பழக்கம்   உடல்நலத்தைச் சிதைக்கிறது. துடிப்பான இளைய தலைமுறை நோய்க்குள்ளாகித் தளர்வடைகிறது.   

குடும்பங்கள் சிதைந்து போகின்றன. திருமணமாகி, குழந்தைகள் உள்ள பெண்களும் பிற ஆண்களிடம் ஈர்க்கப்பட்டு குடும்பம் சிதைவதற்குக் காரணமாகின்றனர். கலாச்சாரம் சீரழிவதைக் கண்டு முதிய தலைமுறை வருந்துகிறது.

“இது ஒரு புதிய கலாச்சாரம்.  மாற்றங்களை வரவேற்கத் தெரியாத பழமைவாதிகள் இக்காலப் போக்கைப் புரிந்துகொள்வதில்லை” என்பது கட்டுப்பாடற்ற தாராளவாதக் கொள்கையை ஆதரிப்பவர்கள் முன்வைக்கும் வாதம்.  பெரும்பாலும் இது அர்த்தமற்ற  காரணங்களை அடிப்படையாகக் கொண்டது.

விலங்குகள் கூடக் கட்டுப்பாடுகளையும் இயற்கை நியமங்களையும் கடைப்பிடிக்கின்றன.    தம்மை உயர்ந்தவராகக் கருதும் மனிதர்கள் இயற்கை நியமங்களைக் கைவிட்டு  விலங்குகளும் அருவருக்கக் கூடிய கீழ்த்தரமான நிலைக்குத் தாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  அனைவரும் தர்மம் என்ற சொல்லையே மறந்து வருகின்றனர்.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

எல்லை மீறத் துடிப்பவர்களுள் கணிசமானோர் இளம் இந்துப் பெண்கள் என்று புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இச்சூழ்நிலை மதமாற்றத்தில் ஈடுபடும் கும்பல்களுக்குச்    சாதகமாக அமைகிறது. இதன் விளைவாகத்  தம் சொந்த மத சம்பிரதாயகளைக்  கைவிடத் துடிக்கும் இந்துப் பெண்கள்,  பிற மதக் கவர்ச்சிக்கு எளிதாக இரையாகின்றனர். ‘பரந்த மனப்பான்மை, அதிநவீனப் போக்கு, எல்லா மதங்களும் ஒன்றுதான்’ போன்ற அறியாமையிலிருந்து பிறந்த கவர்ச்சிகரமான சொற்களால் ஈர்க்கப்பட்டு அப்பெண்கள் அந்தப் பாதையில் சென்று மோசமான விளைவுகளைச் சந்திக்கின்றனர்.

சமுதாயம் எனபது, ‘பெண்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். நாம் கட்டுப்பாட்டுடன் இருப்போம்’ என்று கருதும் புலன்களை அடக்கிய ஆண்களால் மட்டுமே ஆனது அல்ல.  பெரும்பான்மையானோர் சுயக்கட்டுப்பாடு இல்லாத சாதாரண மனிதர்களே. நம்பினாலும் நம்பாவிட்டாலும், ஒப்புக்கொண்டாலும் ஒப்புக் கொள்ளாவிட்டாலும்  நம்மைச் சுற்றியுள்ள சூட்சும உலகில், கண்ணுக்குத் தெரியாத தீய சக்திகள் பெண்களின் மேல் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது உண்மை. அதனால்தான் அத்தகைய எதிர்மறைத் தாக்கங்களிலிருந்துப் பெண்களைப் பாதுகாப்பதற்காக நம் முன்னோர் நடை, உடை, சிகை அலங்காரம் ஆகியவற்றில் பாரம்பரிய நெறிமுறைகளை வகுத்தனர். ஆனால்  பாரம்பரியத்தைப் புறக்கணிப்பதன் மூலம்,  இந்து இளம் பெண்கள்  தீய சக்திகளைத் தம் உடலிலும் மனத்திலும் நுழைவதற்கு அனுமதியளித்துக் கதவைத் திறந்து விடுகிறார்கள். அதன் விளைவாக  அவர்கள் மனம் சிதைந்து  வக்கிரமான எண்ணங்கள் பெருகி  அதர்மச் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

தர்மம் அளிக்கும் பாதுகாப்பு,  கணவன், மனைவி,  பெற்றோர், குழந்தைகள் இடையிலான உறவில் தர்மத்தோடு கூடிய அர்ப்பணிப்பு,  சிற்றின்ப நாட்டத்தில் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடு, பண்பாடு ஆகிய அனைத்தும் இன்று சிதைந்து வருகின்றன. இதன் விளைவுகள் எதிர்காலத்தில் மிக மோசமாக இருக்கும். அதர்மம் பெருகும்போது அது தவிர்க்க முடியாமல் இயற்கைச் சீற்றங்களுக்கு வழிவகுக்கும்.  இது தர்ம சாஸ்திரங்கள் விடுக்கும் எச்சரிக்கை.

ALSO READ:  எதிரிகள் சிரிக்கிறார்கள்

ஜாதகம் பார்ப்பது,  வாஸ்து பார்ப்பது, கோவிலுக்கும் க்ஷேத்திரங்களுக்கும் சென்று பிரார்த்தனை செய்வது போன்றவை மட்டுமே தார்மீக வாழ்க்கை அல்ல. தரமத்தோடு வாழ்ந்து பணிவோடும் கண்ணியத்தோடும் உன்னத மனிதராக உயர்வதே தார்மிக வாழ்க்கை. இப்பண்புகளை இளம் பெண்களிடம், முக்கியமாக இந்துப் பெண்களிடம்   வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை.

சுயக் கட்டுப்பாடு,  பொறுமை, தம்மைத் திருத்திக் கொள்ளும் திறன் ஆகியவற்றால்   நம்முள் விழித்தெழும் தெய்வீக ஆற்றலை உணர வேண்டும். பண்பாடே உண்மையான கலாச்சாரம். பண்பாட்டுச் சிதைவைப் புதிய கலாச்சாரம்  என்று ஏற்க இயலாது. அதை விகாரமான கலாச்சாரம் அல்லது பண்பாடின்மை என்றே விவரிக்க வேண்டும்.

தீங்கானதும் நச்சுத்தன்மை வாய்ந்ததுமான வாழ்க்கை முறையைக் கைவிட்டு, நற்பண்புகள் நிறைந்த தார்மிக வாழ்க்கை முறை மலரும் என்ற நம்பிக்கையுடன்  இத்தகைய உயரிய விழுமியங்களை மதிப்பவர்கள் தகுந்த முறையில் ஒன்றிணைந்துப்  போராட வேண்டும்.

(Source: தலையங்கம், ருஷிபீடம் தெலுங்கு மாத இதழ், ஜூலை, 2026)


ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img