இனி நம்மால் அவரை அவமானப் படுத்த முடியாது!

Published:

kamarajar - 2026

 

”இனிமேல் என்ன இருக்கிறது?” என்ற கேள்விதான் மற்ற எல்லாக் கேள்விகளையும்விட முதலில் எழுந்தது . மீண்டும் மீண்டும் எழுகிறது.

யாராலும் இட்டு நிரப்ப முடியாத ஒரு வெற்றிடம் தோன்றிவிட்டது என்ற எண்ணம்தான் மேலிடுகிறது…

மனம் சாய்ந்தபிறகுதான் சாய்ந்தது அந்த உடல். சந்தேகமில்லை. அந்த மனத்தைச் சாய்த்தவர்கள் பலரும் ஒன்றுகூடி சாய்ந்துபோன உடலுக்கு மரியாதை செலுத் தினோம். வாழும்போது அவர் மனத்துக்கு நாம் செய்த தவறுகளைப் பொறுத்துக் கொண்ட அந்த மனிதன், செத்த பிறகு அவர் உடலுக்கு நாம் செய்த மரியாதையையும் பொறுத்துக் கொண்டார் என்ற நினைப்புத்தான் நெஞ்சை அழுத்துகிறது.

”ஒரு சரித்திரம் முடிந்தது” என்று சொல்வார்கள் . “ஒரு சகாப்தம் முடிந்தது” என்று சொல்வார்கள். “ஒரு தியாக பரம்பரை முடிந்தது” என்று சொல்வார்கள் . ”எல்லாமே முடிந்துவிட்டது” என்று சொல்வதுதான் உண்மையோ என்ற சஞ்சலம் வாட்டுகிறது.

மனவேதனை பெரிதாக இருக்கிறதென்றால் , வெட்கமும் அவமானமும் அதைவிடப் பெரிதாக இருக்கிறது. துக்கம் பெரிதாக இருக்கிறதென்றால் , விரக்தி அதைவிட அதிகமாக இருக்கிறது.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

வருடத்திற்கு ஒருமுறை நாம் நினைத்துப் பார்க்கும் நல்லவர்கள் பட்டியலில் அவரும்
சேர்ந்தாகி விட்டது. நாம் நினைத்துப்பார்க்கும் நம் வயிறுகள் மிஞ்சியிருக்கின்றன. கோடானுகோடி வயிறுகளின் நினைப்பையே தனது மனத்தில் நிறுத்தியிருந்த அந்த மனிதர் போய்ச்சேர்ந்துவிட்டார்.

மற்றவர்களையெல்லாம் வாழவைக்க நினைத்த அந்த மனிதனை , வாழ வேண்டிய விதத்தில் வாழ வைக்காதவர்கள் எல்லாம் சேர்ந்து “வாழ்க” என்ற கோஷம் வானதிரக் கிளப்பி , அவரை வானுலகிற்கு அனுப்பிவிட்டோம்.

நேர்மை விடைபெற்றுக் கொண்டுவிட்டது. பொதுப்பணி , சொல்லிக் கொள்ளாமலே புறப்பட்டுவிட்டது. தியாகம், நமது நன்றி தேவையில்லை என்ற எண்ணத்தில் நம்மைவிட்டு எங்கோ மறைந்துவிட்டது.

திரு.காமராஜ் அவர்களின் மறைவு நம்மை ஒரு சூன்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதை இப்போது நாம் உணரமாட்டோம். வருங்காலத்தில் “அவர்மட்டும் இப்போது இருந்திருந்தால்…!” என்ற வருத்தம் அடிக்கடி தோன்றத்தான் போகிறது. சந்தேகமில்லை.

காலம் நமக்குப்புகட்டாத பாடத்தை , காலதேவன் நமக்கு சொல்லிக் கொடுத்துவிட்டான். ”எடுத்துச் செல்கிறேன் இவரை! அனுபவியுங்கள் இனி!” என்று சாபமிட்டிருக்கிறான் காலதேவன். செய்த தவறுகளுக்கெல்லாம் அனுபவிப்போம்…. நமக்கு வேண்டியதுதான்.

ALSO READ:  காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை... முக்கியத்துவம் என்ன?

யாரும் , யாருக்கும் அனுதாபம் தெரிவிக்கவேண்டிய அவசியமில்லை. சொல்லவேண்டிய அனுதாபங்களை நமக்கு நாமே சொல்லிக்கொள்வோம். அழவேண்டிய அழுகைகளை நமக்கு நாமே அழுதுகொள்வோம். அனுபவிக்க வேண்டிய தண்டனைகளை இனி நாம்தானே அனுபவிக்கப்போகிறோம்?

இனி நம்மால் அவரை வேதனைப்படுத்த முடியாது. இனி நம்மால் அவரை அவமானப்படுத்த முடியாது. பட்டதுபோதும் என்று போய்விட்டார் அந்த நல்ல மனிதர்…. படவேண்டியது இனி நாம்தான்…

***

காமராஜர் மறைவையொட்டி துக்ளக் இதழில் ஆசிரியர் சோ எழுதிய தலையங்க‌ம் ! நாம் இப்போது நினைப்பதை அப்போது வெளிப்படுத்தியுள்ளார் சோ. பெருந்தலைவர் காமராஜர் மரணத்தின் போது அவர் எழுதிய இரங்கல் கட்டுரை இது. சோ சொல்வது போல், அவரை இதற்கு மேலும் நாம் அவமானப் படுத்த முடியாது! இனி அவமானப் படுத்த முடியாது…

இதுதான் இப்போதும் எனக்கு தோன்றுகிறது. நாட்டுக்காகப் பாடுபட்ட அந்த மனிதனை பொய்களால் அவமானப் படுத்தி, அந்த மனிதன் மனம் நொந்து போய் வெந்துபோய் மனம் அழுது தீர்க்கும் படியான வார்த்தைகளால் பாய்ச்சி எடுத்தார்கள் திமுக.,வினர். குறிப்பாக, கருணாநிதி!

ALSO READ:  மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி... தமிழகத்தில் இவை எப்படி?

இத்தகைய தாக்குதலையும் எதிர்கொண்டு ஒருவன் தலைவனாகப் பரிணமித்தார். நாட்டுக்காகவே வாழ்ந்தார். வாரிசுகள் அற்ற வாழ்க்கை! இப்போது நடப்பவைகளை நினைத்தால் இதுதான் நினைவுக்கு வருகிறது…

கருத்து :- வேதம் மது

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img