காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 89): கொடுத்த பணம் வசூலாக செய்த வேலை!

கட்டுரைகள் லைஃப் ஸ்டைல்

digambar ramachandra badge - 2026

திகம்பர் பாட்கே இதை கூறிய போது, அவர் ஒரு ‘ அப்ரூவராக ‘ பேசிக் கொண்டிருந்தார் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. அரசு தரப்பு தன் வழக்கை ருசுப்படுத்துவதற்கு உதவுவதற்காக மன்னிப்பு பெற்ற குற்றவாளி அவர்.

காந்தியை கொல்லச் சதி நடந்தது ,அதன் பின்னணியில் சாவர்க்கர் இருந்தார் என்பதை நிரூபிக்க வேண்டிய ‘கட்டாயம் ‘ அரசு தரப்பிற்கு இருந்தது. ஆனால் நேருவின் பெயர் எங்கிருந்து வந்தது ?

அது அதிர்ச்சியை அதிகப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சி என்றே சொல்ல வேண்டும். ஆனால் அவர் கூறிய கதைப்படியே கூட,காந்தி மற்றும் ‘நேரு‘வை கொல்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது குறித்து பாட்கே ‘அதிர்ச்சி ‘ அடையவும் இல்லை,தன் ‘கண்டனத்தை ‘ தெரிவிக்கவும் இல்லை.

மாறாக சதியில் ஆச்சரியமூட்டும் விதத்தில்,சுறுசுறுப்பாக பங்கேற்றார். சரி இனி பின்னோட்டத்தில் நடந்தவைகளை பார்ப்போம்.

பம்பாயில் ’சதித் திட்டம் ‘ தீட்டப்பட்டு வந்த போது… பாட்கே கேட்டது ஒன்றே ஒன்றுதான்.

ஒரே ஒரு நாள் பூனாவிற்கு சென்று அங்கு வீடு தொடர்பான சில வேலைகளை செய்து விட்டு வர வேண்டும் என்பதுதான். அந்த ‘ வீடு தொடர்பான வேலைகள் ‘ வேறு எதுவும் இல்லை.தன்னிடம் மிச்சம் மீதமிருந்த கையெறி குண்டுகள்,வெடிப்பொருட்கள் ஆகியவற்றை பத்திரமாக ஓரு இடத்தில் வைத்து விட்டு வர வேண்டும் என்பதுதான்.

அவரும் கூட காந்தியை கொன்று விட்டு, ஒன்றுமே நடக்காதது போல, பூனாவிற்கு திரும்பி, தன் தொழிலை தொடர முடியும் என்று எப்படி நம்பினார் என்பதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

பம்பாயில், புலேஸ்வரர் கோயில் வளாகத்தில்,ஆப்தே கேட்ட தற்செயலான ஒரு கேள்வியை  (காந்தியை கொல்லும் முயற்சியில் பங்கேற்க தயாரா) தொடர்ந்து, திகம்பர் பாட்கே காந்தியை கொல்லும் முயற்சியில் பங்கேற்க சம்மதித்தார்.

நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன் என்று சங்கர் கிஷ்டய்யாவும் பின் தொடர்ந்தார். சங்கர் கிஷ்டய்யாவிற்கு யாரை கொல்லப் போகிறார்கள்,எதற்காக கொல்லப் போகிறார்கள் என்பதெல்லாம் தெரியாது.

பாட்கே இதில் ஈடுபட்டதற்கு காரணம்,அவர் தன் பொருட்களையெல்லாம் ஆப்தே மற்றும் நண்பர்களிடம் கொடுத்திருந்தார். அதற்கான பணத்தை பெற்றாக வேண்டியிருந்தது.

சமீப காலங்களில் பல வாடிக்கையாளர்களிடமிருந்து அவருக்கு பணம் வசூலாகாமல் இருந்தது. ஆகவே பணத்திற்காக அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்.

ஆப்தே மற்றும் நாதுராமின் வாழ்க்கை முறை அவரை வெகுவாக கவர்ந்திருந்தது.  பம்பாயில் நாதுராம் பாட்கேயிடம் 50 ரூபாயை கொடுத்து அவருடைய பயணச் செலவிற்காக வைத்துக் கொள்ளும்படி கூறி விட்டு,பொருட்களுக்கான பணத்தை பின்னர் கொடுப்பதாகக் கூறினார்.

பாட்கேயிற்கு பம்பாய் செல்லுவதற்கான செலவு 10 ரூபாய்க்கு மேல் ஆகவில்லை. ஆகவே 50 ரூபாயை நாதுராம் தாராளமாக கொடுத்ததில் ஆச்சரியமும்,மகிழ்ச்சியும் அடைந்தார். இவர்கள்,சேர்ந்து உடன் பணியாற்றுவதற்கு நல்ல மனிதர்கள் எனும் தீர்மானத்திற்கு வந்தார்.

பாட்கேயிற்கு டெல்லிக்கு செல்வதற்கான செலவுக்கான பணமும்,காரியம் முடிந்தவுடன் பெரியதொரு வெகுமதியும் தருவதாக ஆப்தே வாக்களித்தார்.

இது மறுக்க முடியாத தூண்டிலாக இருந்தது பாட்கேயிற்கு. சிறிய அளவில் காரியம் ஆற்றி விட்டு பெரிய அளவில் பணமென எண்ணினார் அவர்.

வயிறார ஹோட்டல்களில் சாப்பாடு அவ்வப்போது குடிப்பதற்கு ரம் டெல்லி போன்று தூர தேசத்திற்கு பயணம். சதித் திட்டத்தில் பாட்கே கடினமாக உழைத்தார். எந்த வித மனத்தாங்கலும் இல்லாது உழைத்தார்.

ஆனால் கடைசி நிமிடத்தில் காரியம் ஆற்ற வேண்டிய நேரத்தில் பயந்து பின்வாங்கி விட்டார். முடிவு அவருக்கான வெகுமதியும் கிடைக்கவில்லை. தன் வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்களுக்கான பணமும் கிடைக்கவில்லை.

( தொடரும் )

#காந்திகொலையும்பின்னணியும்

– எழுத்து: யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.