குருவாயூர் போல… சபரிமலைக்கு தனிச் சட்டம்: கேரள அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
sabarimalai supremecourt - 2026

குருவாயூர் கோயிலில் உள்ளது போன்று, சபரிமலைக்கு தனிச்சட்டம் உருவாக்க வேண்டும் என்று கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவில் மரபுப் படி, 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், அதற்கு மகளிர் அமைப்புகள் சார்பில் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்தனர். இதை அடுத்து, அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

ஆனால் இதை எதிர்த்து மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டன. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் இருந்து 7நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி தீர்ப்பளித்தது. மேலும், அந்த அமர்வு விசாரித்து தீர்ப்பு அளிக்கும் வரை பழைய உத்தரவு அமலில் இருக்கும் என்று கூறியது.

இருப்பினும் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவில் தெளிவு இல்லை என்று கூறிய கேரள மாநில அரசு சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்தது. அதன் அடிப்படையில் சபரிமலையில் இந்த ஆண்டு பெண்கள் தரிசனம் செய்ய கேரள மாநில அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை.

sabarimali iyappan kovil 1 - 2026

சபரிமலைக்கு வரும் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை கேரள போலீசார் திருப்பி அனுப்பி வருகின்றனர். இந்நிலையில் சபரிமலை கோவில் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நீதிபதி ரமணா தலைமையில் உள்ள அமர்வில் இந்த விசாரணை நடந்தது.

அப்போது நீதிபதிகள், சபரிமலை கோவிலுக்காக புதிய சட்டம் ஒன்றை உருவாக்கும்படி கடந்த ஆகஸ்டு மாதம் 27 ஆம் தேதி கேரள அரசை கேட்டுக் கொண்டிருந்தோம். ஆனால் அது திருவாங்கூர்-கொச்சி இந்து மத அமைப்புகள் சட்டத்தை திருத்தியது தொடர்பான ஆவணங்களை மட்டுமே தாக்கல் செய்துள்ளனது. இது ஏற்க இயலாதது. குருவாயூர் கோவிலுக்கும் பக்தர்கள் வழிபாட்டுக்கும் தனிச் சட்டம் நடைமுறையில் உள்ளது போன்று சபரிமலை ஆலய நிர்வாகத்துக்கும் பக்தர்கள் வழிபாட்டுக்கும் புதிய தனி சட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

sabarimala2 - 2026

கேரள அரசு இந்த தனிச்சட்டத்தை உருவாக்குவதற்காக 4 வார காலம் அவகாசம் அளிக்கிறோம். அந்த தனிச்சட்டம் தொடர்பான விரிவான அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் ஜனவரி 3 ஆம் தேதிக்குள் கேரள அரசு தாக்கல் செய்ய வேண்டும். சபரிமலை ஆலயத்துக்கென தனிச்சட்டம் உருவாக்குவதை தாமதப் படுத்தக் கூடாது. தனிக் சட்டம் உருவாக்கினால் தான் பக்தர்கள் தரிசனத்துக்கு உதவி செய்ய முடியும்.

புதிய அறிவிப்புகள் வெளிவரும் வரை பழைய உத்தரவே நடைமுறையில் இருக்கும். எனவே சபரிமலை ஆலயத்தில் தற்போது அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடுவதற்கு எந்த தடையும் இல்லை… என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.