சர்வதேச யோகா தினம்: மோடி, யோகியுடன் லக்னோவில் 51 ஆயிரம் பேர் பங்கேற்று சாதனை

இந்தியா சற்றுமுன்

International Yoga Day 2017 PM Narendra Modi Yogi - 2026

லக்னோ:

பாரத நாட்டின் பாரம்பரியத்தை உலகுக்கு எடுத்துக் காட்டும் யோகக் கலை உலகமெங்கும் பரவும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படும் என ஐ.நா. சபை அறிவித்தது.

2014 டிசம்பர் 11ஆம் தேதி வெளியிடப்பட்ட அந்த அறிவிப்பைத் தொடர்ந்து, 2015ஆம் ஆண்டு முதல் யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில், மூன்றாவது சர்வதேச யோகா தினம் புதன்கிழமை இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி உத்தரப்பிரதேச மாநில தலைநகரான லக்னோவில் ரமாபாய் அம்பேத்கர் மைதானத்தில் காலை 6.30க்கு பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி தொடங்கியது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் பங்கேற்க, பிரமாண்ட யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 51 ஆயிரம் பேர் பங்கேற்று சாதனை படைத்தனர்.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநில ஆளுநர் ராம்நாயக், யோகி ஆதித்யநாத், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று யோகப் பயிற்சி செய்தார்கள். தொலைக்காட்சி சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாநில அரசு செய்திருந்தது. பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், உயர் அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். லக்னோவில் இன்று மழை பெய்தபோதும் அதை பொருட்படுத்தாமல் மோடி உள்ளிட்டோர் யோகா செய்தனர். அனைவரும் தினமும் யோகா செய்ய வேண்டும் என்று மோடி மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் பல்வேறு நகரங்களிலும் யோகா தின நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தலைநகர் புதுதில்லியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சுஜான்பூர்திராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, மணிப்பூரில் மனித வள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மும்பையில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு என முக்கியப் பிரமுகர்கள் பலர் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று யோகப் பயிற்சி மேற்கொண்டனர்.

அமெரிக்கா, நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இன்று யோகா தின சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.