விஜய் மல்லையாவை ஓரம் கட்டிய நீரவ் மோடி; இந்தியாவை உலுக்கிய ரூ.11,400 கோடி மோசடி; வங்கியை ஏய்த்து வெளிநாடு தப்பியோட்டம்!

இந்தியா சற்றுமுன் வணிகம்

புது தில்லி:

இந்தியாவை உலுக்கியெடுக்கும் மிகப் பெரும் கடன் ஏய்ப்பாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடி மோசடி செய்த தொழிலதிபர் நீரவ் மோடி தனது குடும்பத்தினருடன் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று விட்டார். அவர் தப்பியோடிய பிறகே அவர் கண்காணிக்கப்படும் நபராக சிபிஐ அறிவித்துள்ளது புயலைக் கிளப்பியுள்ளது.

வியாழக்கிழமை நேற்று நீரவ் மோடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில், ரூ.5,100 கோடி மதிப்புள்ள தங்கம், வைரம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

தொழிலதிபரும், வைர வியாபாரியுமான நீரவ் மோடி (வயது 46), பெல்ஜியத்தில் உள்ள ஆண்ட்வெர்ப் நகரில் வளர்ந்தவர். இவர் நியூயார்க், லண்டன், பெய்ஜிங், ஹாங்காங், சிங்கப்பூர் உள்ளிட்ட நகரங்களில் சொந்தமாக நகைக் கடை நடத்தி வருகிறார். இவர் குறித்து அண்மையில் செய்தி வெளியிட்டிருந்த ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை, இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இவர் பெயரையும் பட்டியல் இட்டிருந்தது.

இந்நிலையில் நீரவ், பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.280 கோடி மோசடி செய்ததாக அந்த வங்கி சிபிஐயிடம் ஒரு புகாரைப் பதிவு செய்தது. இந்தப் புகாரும் கூட கடந்த ஜனவரி 29 ஆம் தேதி அளிக்கப் பட்டிருந்தது. அதில், நீரவ், அவரது குடும்பத்தினர், அவரது பங்குதாரர்கள் ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் சிலரின் உதவியுடன் பண ஏய்ப்பு மோசடியில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப் பட்டிருந்தது.

வங்கியின் புகார் அடிப்படையில் சிபிஐ, கடந்த ஜனவரி 31ஆம் தேதி ஒரு வழக்கைப் பதிவு செய்தது. அதில், நீரவ் மோடி, அவரது மனைவி ஆமி, சகோதரர் நிஷால், பங்குதாரர்களான மெஹுல் சினுபாய் சோக்ஸி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஓய்வு பெற்ற அதிகாரி கோகுல்நாத் ஷெட்டி, மற்றொரு அதிகாரி மனோஜ் காரட் ஆகியோர் பெயர் இடம்பெற்றது.

ஆனால், சிபிஐ வழக்கு பதிவு செய்யும் முன்னதாகவே, குறிப்பாக, பஞ்சாப் நேஷனல் வங்கி புகார் அளிக்கும் முன்னதாகவே, கடந்த ஜன.1 ஆம் தேதியே நீரவ் மோடி, அவரது மனைவி, சகோதரர் ஆகியோர் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டனர். தப்பிச் சென்ற நீரவ் மோடி ஸ்விட்சர்லாந்தில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுபோல், நீரவ் மோடியின் பங்குதாரரும், கீதாஞ்சலி ஜுவல்லர்ஸ் உரிமையாளருமான மெஹுல் சோக்ஸியும் கடந்த ஜனவரி மாதம் 6-ஆம் தேதியே வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டார்.

நீரவ் மோடி உள்ளிட்டோர் வெளிநாடு தப்பிச் சென்ற பிறகே அவர்கள் குறித்த புகார் வங்கியால் அளிக்கப் பட்டு, அதன் பின்னர் சிபிஐ.,யில் பதிவு செய்யப் பட்டு, அவர்கள் நால்வரையும் கண்காணிக்கப்படும் நபராக சிபிஐ அறிவித்தது. ஏற்கெனவே எஸ்பிஐ., வங்கி உள்ளிட்ட வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் வாங்கிய தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனுக்குத் தப்பிச் சென்றுவிட்ட நிலையில், தற்போது நீரவ் மோடியும் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் மல்லய்யாவைக் காட்டிலும் அதிக அளவிலான கோடிகளில் நீரவ் மோசடி செய்து தப்பிச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.