சசிகலாவுக்கு சிறையில் வசதிகள் செய்து கொடுக்க நான் சொல்லவில்லை; சித்தராமையா

இந்தியா சற்றுமுன்

பெங்களூர்:

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப் பட்டுள்ள சசிகலாவுக்கு சிறையில் வசதிகளைச் செய்து கொடுக்குமாறு நான் எந்த உத்தரவோ அறிவுறுத்தல்களோ ஏடிஜிபிக்கு வழங்கவில்லை என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று சசிகலா உள்ளிட்டோர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருப்பதாக சிறைத்துறை டிஐஜி ரூபா கூறினார். மேலும், இதற்காக சிறைத்துறை முன்னாள் டி.ஜி.பி. சத்திய நாராயண ராவ் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றிருப்பதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

DIG Rupa SASIKALA - 2026

இதை அடுத்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்மட்ட குழு விசாரணை நடத்தி, கர்நாடக அரசிடம் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தது. அதன்படி, சிறையில் முறைகேடுகள் நடப்பதாகவும்ம், சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க சிறைத்துறை முன்னாள் டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுவது குறித்து ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கவும் அரசு உத்தரவிட்டது.

இதன்படி, சத்திய நாராயண ராவ் மீது ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சிறை அதிகாரிகள் மீதும் ஊழல் தடுப்புப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை வைத்து, ஊழல் தடுப்பு படை போலீஸார் விசாரணையைத் தொடங்கி நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், முதல்வர் சித்தராமையா கூறியதால்தான், சசிகலாவுக்கு சிறையில் சில சலுகைகளை வழங்கினேன் என கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முன்னாள் டிஜிபி சத்தியநாராயணா மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தன் மீதான குற்றச்சாட்டை நிராகரிக்கும் விதமாக, பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா முதல்வர் சித்தராமையா, “சசிகலாவுக்கு சிறையில் வசதிகள் செய்து தருமாறு நான் எதுவும் கூறவில்லை. மற்ற கைதிகளுக்கு வழங்கும் வசதிகள் கூட சசிகலாவிற்கு சிறையில் தரப்படவில்லை என தமிழகத்தில் இருந்து வந்த கடிதத்தின் பேரிலேயே சசிகலாவிற்கு வசதிகள் செய்து தரக் கூறினேன். சட்டத்திற்கு உட்பட்டு சிறையில் சசிகலாவிற்கு வசதிகள் செய்து தருமாறு அறிவுறுத்தினேன்” என்று விளம்மக் அளித்துள்ளார்.

சட்டத்துக்கு உட்பட்டு சிறையில் வசதிகள் செய்து தருமாறு முதல்வர் அறிவுறுத்த வேண்டிய தேவை என்ன? பிரச்னை பெரிதான நிலையில், தன்னை விடுவித்துக் கொள்ளும் விதமாக, சத்யநாராயணா ஏன் முதல்வரை மாட்டி விட்டார். முதல்வர் சித்தராமையா முதலில் ஏன் மௌனம் காத்தார் என்று விடை தெரியாத பல கேள்விகள் பின்னணியில் உள்ளதால், இந்த விவகாரம் பெரிதாகும் என்று கர்நாடக அரசியல் மட்டத்தில் விவாதம் சூடு கிளம்பியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.