உலகின் பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு ஆறாவது இடம்!

இந்தியா உலகம் சற்றுமுன் வணிகம்

flag indian - 2026

உலக அளவில் செல்வச் செழிப்புள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு ஆறாவது இடம் கிடைத்துள்ளது. இந்திய செல்வ வளம் 8,230 பில்லியன் டாலர் என்ற அளவில் உள்ளதாம். உலக அளவில் செல்வ வளமிக்க நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

ஏஎப்ஆர் ஆசிய வங்கியின் உலகளவிலான செல்வநிலை மதிப்பீட்டில், அமெரிக்கா 62,584 பில்லியன் டாலர்களுடன் முதலிடத்திலும், சீனா 24,803 பில்லியன் டாலர்களுடன் இரண்டாம் இடத்திலும், ஜப்பான் 19,522 பில்லியன் டாலர்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

செல்வ நிலை என்பது, அந்த நாட்டின் தனி நபர்களின் சொத்து, பணம், வணிக நிலை, பங்குகள் உள்ளிட்டவற்றையும் சேர்த்ததாக அமைகிறது. இந்தக் கணக்கீட்டில் அரசு தரும் நிதி, உதவிகள் நீங்கலாக கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளன. பெரிய நாடுகளில், அந்நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப இது அமைகிறது.

இந்தப் பட்டியலில், நான்காவது இடத்தில் 9,919 பில்லியன் டாலர்களுடன் இங்கிலாந்தும், 9,660 பில்லியன் டாலர்களுடன் ஜெர்மனி ஐந்தாவது இடத்திலும், 8,230 பில்லியன் டாலர்களுடன் இந்தியா 6 வது இடத்திலும் உள்ளன.

மேலும், பிரான்ஸ் 6,649 பில்லியன் டாலர், கனடா 6,393 பில்லியன் டாலர், ஆஸ்திரேலியா 6,142 பில்லியன் டாலர் இத்தாலி 4,276 பில்லியன் டாலர் என அடுத்த நிலையில் இந்தப் பட்டியலில் டாப் 10 இடம் பிடித்த நாடுகள்.

இந்தியாவில் சொத்து மதிப்பு கடந்த 10 வருடங்களுக்குள் 200 மடங்கு அதிகரித்துள்ளதாம். அதற்குக் காரணமாக, அதிக எண்ணிக்கையிலான தொழில் முதலீட்டாளர்கள், சிறந்த கல்வி முறை, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, மருத்துவத் துறை, ரியல் எஸ்டேட், ஊடகங்கள் துறை உள்ளிட்டவை அமைந்துள்ளன.

அடுத்த 10 ஆண்டுகளில், சீனாவின் வளம் 69,449 பில்லியன் டாலர் என்று உயரக் கூடும். அதே காலத்தில் அமெரிக்காவின் வளமை 75,101 பில்லியன் டாலராக உயரும்.

அடுத்த 10 ஆண்டுகளில் இந்தப் பட்டியலில் 4 அல்லது 5வது இடத்தை இந்தியா எட்டும். அது ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளை பின்னுக்குத் தள்ளி, 4ஆம் இடத்தைப் பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.