கேரள நிவாரண நிதி; அதிமுக., எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை அளிக்கின்றனர்!

இந்தியா சற்றுமுன் சென்னை தமிழகம்
edappadi pazanisamy - 2026
சென்னை: கேரள மாநிலத்தில் எழுந்துள்ள அசாதாரண சூழலுக்கு உதவும் வகையில், தமிழக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்குகின்றனர்.
கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை கொட்டித் தீர்த்து பல்வேறு மாவட்டங்களை நீரில் மூழ்கடித்து விட்டது. மழை மற்றும் நிலச்சரிவுகளால் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத மிகப் பெரும் இயற்கைப் பேரழிவை கேரளம் சந்தித்துள்ளது. நேற்று மட்டும் 33 பேர் உயிரிழந்துள்ளனர். கேரள வெள்ளத்துக்கு இதுவரை 357 பேர் உயிரிழந்துள்ளனர். இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப் பட்டுள்ள கேரளத்துக்குப் பல மாநிலங்களும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
இந்நிலையில், கேரள வெள்ள நிவாரண நிதிக்கு, அதிமுக., எம்.பி,க்கள், எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை அளிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கு அதிமுக., எம்.பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை நிதியாகத் தருவார்கள். மேலும், கேரளாவுக்கு உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.