ஆரம்பமே கோல்மால்?! இம்ரான் கானுக்கு என்ன எழுதினார் மோடி?

இந்தியா உலகம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

imran khan narendra modi - 2026

பாகிஸ்தானின் 22வது பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான் கான், அண்டை நாடுகளுடனான உறவை மேம்படுத்தும் வகையிலான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான் கானுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து  தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார். ஆனால் அந்தக் கடிதத்தில், இருதரப்பு உறவை மேம்படுத்த ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்கு தயார் என பிரதமர் மோடி கூறியுள்ளதாக புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெக்மூத் குரேஷி தெரிவித்தார். இந்நிலையில், பாகிஸ்தான் அமைச்சரின் இந்தத் தகவலை மறுத்துள்ள இந்தியா, புதிதாக பிரதமர் பதவியேற்ற இம்ரான் கானுக்கு வாழ்த்து மட்டுமே கூறி, மோடி கடிதம் எழுதியதாக விளக்கம் அளித்துள்ளது.

பாகிஸ்தான் தினசரி பத்திரிகையான டான், இது குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. அதில், ஊடகங்களிடம் பேசிய குரேஷி, இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையை துவக்கவேண்டும் என்று குறிப்பிட்டு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளதாகக் கூறியுள்ளார்.

ஆனால், பேச்சுவார்த்தையைத் துவக்கலாம் என்று மோடி எழுதியுள்ளதாகக் குறிப்பிடும் குரோஷியின் பேச்சை மறுத்துள்ள இந்திய உயரதிகாரிகள், மோடி ஒரு வாழ்த்துக் கடிதம்தான் எழுதியுள்ளார் என்றும், இம்ரானை வாழ்த்தியே அதில் வாசகம் இருந்தது பேச்சுவார்த்தை குறித்து எதுவும் அல்ல என்றும் கூறியுள்ளனர்.

இதே ஊடக சந்திப்பில், பாகிஸ்தான் அமைச்சர் குரோஷி, இந்தியா காஷ்மீர் பிரச்னையின் அவசியத்தை உணர்ந்துள்ளது என்று கூறியுள்ளார். மேலும், நாங்கள் இந்தியாவுக்கு தெரிவித்துக் கொள்வது என்னவென்றால், இங்கே சாகசத்துக்கு இடம் இல்லை, நாங்கள் உங்கள் அண்டை நாடு மட்டுமல்ல, அணு ஆயுத சக்தி கொண்ட நாடும் கூட என்று கூறியுள்ளார்.

இஸ்லாமாபாதில் இம்ரான் கானுடன் 21 அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவை பதவி ஏற்ற சிறிது நேரத்தில் ஊடகத்தினரிடம் பேசிய அமைச்சர் குரோஷி இப்படி மிரட்டல் தொனியில் பேசியுள்ளார்.

குரோஷி முன்னர் 2008 -2011 காலகட்டத்தில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஆட்சியில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவர். நவம்பர் 2008ல் மும்பை தாக்குதல் நடைபெற்ற போது அமைச்சரவையில் இருந்தவர் குரோஷி.

பொதுவாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் டிவிட்டர் பதிவில் தனது கருத்துகளை, நடப்புகளை, தான் நினைப்பதை வெளிப்படுத்துவதில் ஆர்வமாக இருப்பவர். வெளிநாட்டுத் தலைவர்களுடனான சந்திப்பு, வெளிநாட்டு விவகாரங்களில் கருத்து சொல்வது என பலவற்றுக்கும் டிவிட்டரை பயன்படுத்துபவர், இம்ரான்கான் விஷயத்திலும் பாகிஸ்தான் விஷயத்திலும் டிவிட்டரில் எந்தப் பதிவையும் செய்யவில்லை.

பதவி ஏற்றவுடனேயே கோல்மால் வேலையைத் துவங்கியுள்ளது பாகிஸ்தான் அரசு. கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதி ஆன இம்ரான் கான், கிரிக்கெட்டிலேயே கோல்மால் ஸ்பெஷலிஸ்ட்டாக பெயர் எடுத்தவர். பேண்ட் பாக்கெட்டில் சோடா மூடிகளைப் போட்டு, பந்தை சேதப் படுத்தி, விக்கெட் எடுப்பதற்காக விதிமுறைகளை மீறி கோல்மால் செய்து மாட்டிக் கொண்டவர். ஒரு ப்ளேபாய் ரேஞ்சுக்கு உலா வந்தவர், இப்போது பாகிஸ்தானின் பிரதமர் பதவியில் அமர்ந்திருக்கிறார். அந்தப் பழைய வாசனை இப்போது அடிப்பதையே அவரது பேட்டிகளும், அமைச்சரவை சகாக்களின் பேச்சுகளும் வெளிப்படுத்துகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.