144 தடை… போலீஸ் கெடுபிடி… வெகுவாகக் குறைந்த பக்தர் கூட்டம்!

இந்தியா உரத்த சிந்தனை சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்

sabarimalai rain - 2026

அரசு நிர்வாகம் பிறப்பித்த 144 தடை உத்தரவு, காவல் துறையின் கெடுபிடிகள் இவை காரணமாக சபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்தே காணப் படுகிறது. இதனால் கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்துகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது.

சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து, கேரளத்தில் ஐயப்ப பக்தர்கள் பெரும் கொதிப்படைந்தனர். இதை அடுத்து, பா.ஜ.க.,வும் அவர்களுடன் இணைந்து போராட்டத்தை நடத்திவருகிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு என்ற காரணத்தைக் காட்டி, தங்களின் அரசியல் உள்நோக்கத்தை தீர்த்துக் கொள்வதில் முனைப்பு காட்டி வருகிறது கேரள இடதுசாரி கம்யூனிஸ்ட் அரசு.

இந்நிலையில் கார்த்திகை முதல் தேதி பிறந்ததும், மண்டல பூஜைக்காக, கடந்த 16-ஆம் தேதி சபரிமலை நடை திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சபரிமலை சந்நிதானம், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகள் காவல் துறை கட்டுப்பாட்டில் வந்தது. இந்து ஐக்கிய வேதி அமைப்பின் தலைவர் சசிகலா, பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் சுரேந்திரன் மற்றும் 85-க்கும் மேற்பட்டோர் தொடக்கத்திலேயே கைது செய்யப்பட்டனர்.
இதை அடுத்து, 144 தடை உத்தரவைக் காரணம் காட்டி, போலீஸார் பல்வேறு கெடுபிடிகளை விதித்தனர். சந்நிதி நடை அடைக்கப்பட்ட பிறகு, சந்நிதானத்தில் பக்தர்கள் யாரும் தங்கக்கூடாது, பம்பையில் இருந்து இரவு 9 மணிக்கு மேலும் அதிகாலை 2 மணிக்குள்ளும் எவரும் பம்பையில் இருந்து சபரிமலை சந்நிதானத்துக்கு செல்லக் கூடாது, சந்நிதிதானத்தில் எவரும் தங்கக் கூடாது, உடனே திரும்பிவிட வேண்டும், ஒரு வழிப் பாதையில் தான் வரவேண்டும், எவரும் அங்கங்கே அமர்ந்து பேசக் கூடாது என்றெல்லாம் பல்வேறு கட்டுப்பாடுகளைக் காவல் துறை விதித்துள்ளது. காவல் துறையின் கெடுபிடி, பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், சபரிமலை வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.

நடை திறந்து நான்கு நாட்கள் ஆன நிலையில், இன்றும் பக்தர்கள் எண்ணிக்கை குறைவாகவே காணப் பட்டது. இன்று காலை முதல் 4 மணி நேரத்தில் சுமார் 8,000 பக்தர்களே 18-ஆம் படியைக் கடந்து சென்றுள்ளனர். ஆனால், கடந்த ஆண்டில், ஒரு மணி நேரத்தில் 10,000-க்கும் அதிகமான பக்தர்கள் சந்நிதானத்திற்குச் சென்றனர். அந்த வகையில் கடந்த வருடங்களைக் காட்டிலும் ஐந்தில் ஒரு பங்குக்கும் குறைவாகவே பக்தர்கள் சபரிமலையில் இந்த மண்டல பூஜை காலத்தில் தரிசனத்துக்கு வந்துள்ளனர்.

நிலக்கல்லில் இருந்து பம்பைக்குச் செல்லும் அனைத்து பேருந்துகளும் காவல் துறை கட்டுப்பாட்டில்தான் இயங்குகின்றன. இதனால், பேருந்தில் இருக்கைகள் நிரம்பினாலும் காவல் துறை அனுமதிக்காக பல மணி நேரம் பக்தர்கள் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. பக்தர்கள் வருகை குறைந்ததால், 310 பேருந்துகளில் 50 பேருந்துகளின் இயக்கம் நிறுத்தப்பட்டது. அதுபோல 10 மின்சாரப் பேருந்துகளில் 3 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

பொதுவாக குமுளி, செங்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து தமிழ்நாடு அரசுப் பேருந்து, விரைவுப் பேருந்துகள் அதிகம் இயக்கப் படும். இந்த முறை இதுவரையிலும் பேருந்துகள் அதிகம் இயக்கப் படவில்லை. செங்கோட்டை எல்லையைக் கடந்து பம்பைக்கு செல்லும் வாகனங்களும் வெகுவாகக் குறைந்தே காணப் படுகின்றன.

இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், விரைவுப் பேருந்துகள் இயக்கத்துக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குழுவாகச் செல்ல விரும்புவோர், அரசுப் பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ள விடுக்கப் பட்டுள்ள அறிவிப்பு இதுதான்..!

bus for sabarimala - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.