மின்னணு வாக்குப் பதிவு எந்திரம் குறித்த அவதூறு: கிழிந்தது காங்கிரஸின் முகத்திரை!

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை ஹேக் செய்யலாம் என்ற குற்றச்சாட்டு, காங்கிரசின் திட்டமிட்ட நாடகம் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியிருந்தார். அது எந்த வகையிலான நாடகம் என்பதற்கு, ஃபாரின் பிரஸ் அசோஸியேஷனே பல விளக்கங்களை அளித்துவிட்டது. இதன் மூலம், அந்த நிகழ்வில் உடன் இருந்த காங்கிரஸின் கபில் சிபல் நாடகமும் வெளியில் வந்துள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை ஹேக் செய்து முறைகேட்டில் ஈடுபடலாம் என்ற குற்றச்சாட்டு, காங்கிரஸ் கட்சியால் திட்டமிடப்பட்டு பரப்பப் படுகிறது. குறிப்பாக, கடந்த 2014 தேர்தலில் இவ்வாறு செய்யப் பட்டுதான் பாஜக., வென்றதாக காங்கிரஸ் மக்களை நம்ப வைக்க பல நாடகங்களை நடத்தி வருகிறது. இவ்வளவுக்கும், அப்போது ஆளும் கட்சியாக இருந்ததும் காங்கிரஸ், அரசு அதிகாரிகளும் காங்கிரஸுக்கு ஆதரவானவர்கள். இந்த நிலையில், தங்களது தோல்விக்கு மின்னணி வாக்குப் பதிவு இயந்திரத்தில் குளறுபடி என்று கூறி திசை திருப்பி வருகிறது காங்கிரஸ். உள்ளூரில் அதற்கு அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் ஊதுகுழலாக செயல்பட்டனர். இந்நிலையில், அதன் பிரசார திட்டமிடலில் ஒரு நாடகம் தான் அண்மையில் லண்டனில் அரங்கேற்றப்பட்டது.

ஐரோப்பாவுக்கான இந்தியப் பத்திரிகையாளர் சங்கம், திங்கட்கிழமை லண்டனில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில், அமெரிக்காவில் வசிக்கும், இந்திய தொழில்நுட்ப நிபுணரான சையத் சுஜா (Syed Shuja) என்ற இஸ்லாமியர், ஸ்கைப் மூலம் உரையாற்றினார். அப்போது இந்தியாவில் தேர்தல் காலங்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார். குறைவான அதிர்வெண் மூலம் வாக்குப்பதிவு எந்திரங்களில் உள்ள டிரான்ஸ்மீட்டர் சிப்புகளை ஹேக் செய்ய முடியும் என்றும், இதன்மூலம் எளிதாக முறைகேட்டில் ஈடுபட முடியும் என்றும் சையத் சுஜா கூறினார். இது பத்தோடு பதினொன்று என்று கடந்து போய் விடக் கூடியதுதான். ஆனால், இந்திய ஊடகங்கள் இதனை பெரிய அளவில் செய்தியாகக் கொண்டு சேர்த்தன. இதனால் பரபரப்பு தொற்றிக் கொண்டது. தொடர்ந்து சர்ச்சைகளும் ஏற்பட்டன.

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ECIL எனப்படும் எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட்-ல், 10 ஆண்டுகள் பணிபுரிந்தேன் என்று கூறினார் சையத் சுஜா. மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை ஹேக் செய்ய முடியுமா? என்ற ஆய்வு 2013ல் நடைபெற்றதாகவும், தங்களது குழுவினர், அப்போது அதனை ஹேக் செய்ய முடியும் என நிரூபித்ததாகவும் சையத் சுஜா கூறினார்.

பாஜக மூத்த தலைவர் கோபிநாத் முண்டே மரணம், பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் மரணம் இவை போன்ற பயத்தினால்தான் தாமும் அச்சப்பட்டு ஒதுங்கியதாகவும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை ஹேக் செய்ய முடியும் என நிரூபித்ததாலேயே தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் புகுந்து வசித்து வருவதாகவும் ஒரு தகவலைப் பரப்பினார்.

ஆனால், சையத் சுஜாவின் இந்தக் குற்றச்சாட்டை இந்திய தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்தது. BHELம், ECILம் இணைந்து மிக கவனமான நடைமுறைகளுடன், கடுமையான பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தயாரித்து வழங்குகின்றன. இந்நிலையில், இந்த நபர் வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் மிகவும் மலிவான, முட்டாள்தனமான குற்றச்சாட்டுகள் எனக் கூறிய இந்திய தேர்தல் ஆணையம் அவர் மீது சட்டப் பூர்வ நடவடிக்கை எடுக்கப் படும் என்று கூறியது.

இந்திய அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த லண்டன் நிகழ்வில், காங்கிரஸ் எம்.பி கபில்சிபல் பங்கேற்றார். இவரது பங்கேற்பு தற்போது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

இதனிடையே இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இந்திய ஜனநாயகத்தை சீர்க்குலைக்க, காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு ஒருங்கிணைத்ததுதான் இந்த லண்டன் நாடகம். இந்த லண்டன் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் ஆஷிஷ் ராய், காங்கிரஸ் கட்சிக்கும் ராகுல் காந்திக்கும் மிகவும் நெருக்கமானவர் என்று கூறினார்.

இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, லண்டன் நிகழ்ச்சியில் கபில்சிபல் பங்கேற்றது, அவரது தனிப்பட்ட பயணம்! கட்சிக்கும் அவரது பங்கேற்பிற்கும் சம்பந்தமில்லை என்றார். இருப்பினும், சையத் சுஜாவின் குற்றச்சாட்டுகள் தீர விசாரிக்கப்பட வேண்டியவை என்றார்.

இதனிடையே, தில்லி காவல்துறையிடம், இந்திய தேர்தல் ஆணையம், செவ்வாய்க்கிழமை மாலை புகார் ஒன்றை அளித்தது. அதில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை ஹேக் செய்து முறைகேடு செய்ய முடியும் என்று அவதூறு பரப்பிய சையத் சுஜா மீது வழக்குப்பதிவு செய்து, உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று புகார் அளித்து, கோரிக்கை விடுத்தது.

இந்நிலையில், இந்திய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்யலாம் என ஆதாரம் இல்லாமல் குற்றம் சுமத்திய சையத் சுஜா நம்பகத்தன்மை அற்றவர் என, அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இத்தாலி பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார். நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ஓர் அமைப்பான சர்வதேச பத்திரிகையாளர் சங்கமும் இதில் இருந்து தமக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஒதுங்கிக் கொண்டுள்ளது.

இந்திய மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியும் என்பதை நிரூபிக்கிறேன் எனக் கூறி சையது சுஜா என்பவர் பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த பத்திரிகையாளர் சந்திப்பு லண்டன் நகரில் ஜன.,21 திங்கள் அன்று நடைபெற்றது. ஐரோப்பாவுக்கான இந்திய பத்திரிகையாளர் சங்கம் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் தனது அடையாளத்தை வெளிக்காட்டாமல் ஸ்கைப் மூலம் பேசிய சையத் சுஜா, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் முறைகேடு நடந்தது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் முறைகேடு காரணமாக அந்தத் தேர்தலில் காங்கிரஸ் 201 தொகுதிகளை இழந்தது. அப்போது, பாஜக.,வைத் தவிர்த்து, ஆம்ஆத்மி, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளும் என்னிடம் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்வது குறித்துத் தெரிந்து கொள்ள தம்மை அணுகின என்று கூறினார்.

இதனால் பாஜக., மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் தில்லு முல்லு செய்தது என்று காங்கிரஸுக்கு ஆதரவான கருத்தைக் கூற வந்தார் சையத் சுஜா. ஆனால், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து குறுக்கு முறையில் வெற்றி பெற காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி கட்சிகள் எவ்வளவு தூரம் முயன்றுள்ளன என்பதை சையத் சுஜா அப்பட்டமாக வெளிக்காட்டி விட்டார் என்கிறார்கள் விமர்சகர்கள்.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ஃபாரின் ஜர்னலிஸ்ட் அசோஷியேஷன் வெளியிட்ட அறிக்கையில், கணினி நிபுணர் ஊழல் மற்றும் 2014 இந்திய தேர்தல் குறித்து மிகத்தீவிரமான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். அவர் தாம் தாக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். கடந்த விழாழக்கிழமை நடந்த தாக்குதலில் இருந்து மீண்டு வருவதாகவும், இதனால் தம்மால் பயணம் செய்ய முடியாது என்றும், ஸ்கைப் மூலம் உரையாடுவதாகவும் கூறினார். மேலும், இந்திய தேர்தல் குறித்து விமர்சனம் செய்ததாலேயே தாம் தாக்கப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்! இந்த ஆண்டு 90 கோடி மக்கள் ஓட்டளிக்க தகுதி பெற்றுள்ளனர். சையத் சுஜா கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். ஆனால் அவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள். சையத் சுஜாவின் குற்றச்சாட்டுகளில் இருந்து நாங்கள் ஒதுங்கிக் கொள்கிறோம். அவரின் குற்றச்சாட்டுகளில் ஒன்று கூட நிரூபிக்கப் படவில்லை…. என்று தெரிவித்தது.

இதன் டிவிட்டர் பதிவுகளும், காங்கிரஸின் திட்டமிட்ட நாடகத்தை வெளிக் கொணர்ந்தன.

இந்நிலையில், லண்டன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, இத்தாலிய ஊடகவியலாளர் டேபோரா போனெட்டீ வெளியிட்ட கருத்தில், லண்டன் கூட்டத்தில் சையத்சுஜா கூறிய பல குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை! அவர் தனது குற்றச்சாட்டுகளுக்கு எந்த வித ஆதாரத்தையும் காட்டவில்லை. அவர் உண்மையான நபர் இல்லை. அவருக்கு அங்கே பேசுவதற்கு வாய்ப்பு அளித்திருக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...