இணைய வசதியை கார்ப்பரேட்கள் கையில் கொடுக்க அரசு முயற்சி: ராகுல் குற்றச்சாட்டு

புது தில்லி: இணைய சமநிலை – நெட் நியூட்ராலிட்டி குறித்த விவாதத்தின்போது, இணைய வசதியை கார்ப்பரேட் நிறுவனங்கள் கையில் ஒப்படைக்க மத்திய அரசு முயற்சி செய்துவருகிறது, அதற்கான டிரையல் பலூன் இப்போது பறக்கவிடப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். நாடாள்மன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆவது கட்ட கூட்டம் ஒரு மாத இடைவெளிக்குப் பின்னர் திங்கள் அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், இன்று கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு நெட் நியூட்ராலிட்டி குறித்து விவாதிக்க வேண்டும் ராகுல் காந்தி தரப்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இதை அடுத்து மக்களவையில் பேசிய ராகுல்காந்தி, மத்திய அரசு இணையத்தைப் பிடுங்கி கார்ப்ரேட் நிறுவனங்கள் கையில் கொடுக்க முயற்சி செய்கிறது. நெட் நியூட்ராலிட்டி விவகாரத்தில் சட்டத்தை மாற்றுங்கள் இல்லை புதிய சட்டத்தை உருவாக்குங்கள் என்று கூறினார். நாடாளுமன்றக் கூட்டம் முடிந்த பின்னர் வெளியே செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர்களிடம், எதிர்ப்பை சோதித்துப் பார்ப்பதற்கான டிரையல் பலூனை பறக்க விட்டிருக்கிறார்கள். எதிர்ப்பு பலமாக இருந்தால், அது செயல்படுத்தப்படாது. எனவே, நெட்நியூட்ராலிடியை பாதுகாக்கவே நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். நிலம் கையகப்படுத்தலைஅடுத்து, இன்டர்நெட் வசதியை கார்ப்ரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது என்றார் ராகுல் காந்தி.