தெலங்கானாவில் அதிர்ச்சி… +2 தேர்வு முடிவுகளில் குளறுபடி! 20 பேர் தற்கொலை!

இந்தியா கல்வி சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

opposition met telenagana governor - 2026

தெலங்கானா மாநிலத்தில் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகளில் ஏற்பட்ட குளறுபடியால் 20 மாணவ மாணவியர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்தச்  சம்பவம்.

தெலங்கானாவில் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பிளஸ் டூ தேர்வுகளை அம்மாநில தேர்வுத் துறை நடத்தியது. இதில், சுமார் 12 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வுகளை எழுதியிருந்தனர்.

தேர்வு முடிவுகள் கடந்த 18ஆம் தேதி வெளியிடப்பட்டன. இந்தத் தேர்வு முடிவுகள்,  ஏராளமான மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு அதிர்ச்சி அளித்தது. மொத்த மதிப்பெண்ணான ஆயிரத்துக்கு, 750 முதல் 900 வரை பெற்ற மாணவ, மாணவிகள் பலரும் தேர்ச்சி பெறவில்லை என அறிவிக்கப்பட்டது. இப்படி சுமார் 3 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்ச்சிக்கான மதிப்பெண்ணுக்கு கூடுதலாக பெற்றிருந்தும் தேர்ச்சி பெறவில்லை என முடிவு வெளியானதால் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து தேர்வு முடிவுகள் வெளியான மறுநாளே மாணவ, மாணவிகள் 10 பேர் விஷம் குடித்தும் தூக்கிட்டும், தீ வைத்துக் கொண்டும் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்நிலையில், பெற்றோர் மற்றும் சமூக நல அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து, கட்டணமின்றி விடைத்தாள் நகலைப் பெற்று மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என தெலங்கானா மாநில அரசு அறிவித்தது.

ஆனால், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளில் பலரும், தாங்கள் சிறப்பாக தேர்வை எழுதியும் மிகக் குறைந்த மதிப்பெண்களே வழங்கப்பட்டிருப்பதாக ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கினர்.

இந்த அலட்சியப் போக்கை எதிர்த்து தெலுங்கு தேசம், காங்கிரஸ், இடதுசாரிகள், தெலங்கானா ஜன சமிதி என அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் ஆளுநர் நரசிம்மனை சந்தித்து இது தொடர்பாக மனு அளித்தனர்.

கல்வித் துறை அமைச்சரை பணி நீக்கம் செய்ய வேண்டும், மறுமதிப்பீடு செய்து விரைவாக முடிவை அறிவிக்க வேண்டும் என அவர்கள் மனு அளித்தனர்.

இதற்கிடையே மேலும் 10 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதால் தெலங்கானா தேர்வுத் துறையின் அலட்சியப் போக்கினால் ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்னை இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.