திருவண்ணாமலை குகையில் தங்கியிருந்த சீனருக்கு 2 முறை கொரோனா சோதனை!

Published:

chinese traveller in thiruvannamalai cave
திருவண்ணாமலை தீப மலையில் குகையில் தங்கியிருந்த சீன பயணி

தங்குவதற்கு அறை எதுவும் கிடைக்கவில்லை என்பதால் மலைக் குகையில் ரகசிய வாழ்க்கை வாழ்ந்து வந்த சீன பயணி ஒருவரை வனத்துறையினர் கண்டறிந்து அவரை இரு முறை கொரோனா சோதனைக்கு உட்படுத்தினர்.

ஆன்மிக பூமியாக விளங்கும் திருவண்ணாமலைக்கு ஏராளமான வெளிநாட்டுப் பயணிகள் வந்து செல்கின்றனர். வெளிநாட்டினர் சிலர் வெகு நாட்கள் இங்கேயே தங்கி ஆன்மிக சுற்றுலாவை அனுபவிப்பார்கள். அவ்வாறு தமிழகம் வந்து தங்கியிருந்த சிலர், கொரோனா நோய்த் தொற்று பரவலுக்கு முன்பே தங்களது நாடுகளுக்குச் சென்றுவிட்டனர்.

இருப்பினும் திருவண்ணாமலைக்கு வந்த சிலர், அங்கேயே பாதுகாப்புடன் தங்கி இருக்கிறனர். அவர்களில் ஒரு பயணி, கடந்த 5ஆம் தேதி அன்று தீபம் ஏற்றும் மலை மீது உள்ள கற்குகையில் தங்கியிருப்பதைப் பார்த்த வனத்துறை காவலர்கள் அவரை கீழே அழைத்து வந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பெயர் யங்யாஹூரி என்பதும், சீன தலைநகர் பெய்ஜிங்கை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

கொரோனா அச்சுறுத்தலுக்கு முன்பே இந்தியாவுக்கு சுற்றுலா வந்து பல இடங்களை சுற்றிப் பார்த்து விட்டு, கடைசியாக திருவண்ணாமலைக்கு வந்து ரமணர் ஆசிரமத்தில் தங்கியிருந்துள்ளார். பின்னர் அங்கிருந்து வெளியேறியவர் வேறு எங்கும் தங்குவதற்கு இடம் கிடைக்காத நிலியில், கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் தீபம் ஏற்றப்படும் மலை மீது ஏறிச்சென்று அங்கேயே 10 நாட்களுக்கும் மேலாகத் தங்கியிருந்துள்ளார்.

இருப்பினும், அவர் சீனாவைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு கொரோனா நோய்த்தொற்று இருக்கலாம் என்ற அச்சத்தில் கடந்த 5 ஆம் தேதி, பரிசோதனைக்காக திருவண்ணமலை மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய ரத்த மாதிரி சென்னைக்கு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏதும் இல்லை என்று பரிசோதனை முடிவு வந்துள்ளது.

இதுகுறித்து திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி கூறுகையில், “சீனாவை சேர்ந்த அந்த பயணி ரமணர் ஆசிரமத்தில் தங்கியிருந்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து அவரை அனுப்பியுள்ளனர். வெளியே வந்தவர் பல விடுதிகளில் அறை கேட்டுள்ளார். ஊரடங்கு உத்தரவால், எவரும் அறை வழங்காத நிலையில், தனியாகச் சென்று குகையில் தங்கியிருந்துள்ளார்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

அவருடைய ரத்த மாதிரியை இரண்டு முறை பரிசோதனை செய்தோம். இரண்டு முறையும் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. வரும் 3ஆம் தேதிக்குப் பிறகு விமான போக்குவரத்து தொடங்கப் பட்டால், அவரை மாவட்ட நிர்வாகம் மூலம் அவருடைய சொந்த நாட்டிற்கு அனுப்பி வைப்போம்” என்றார்.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img