ரஜினி தனிக்கட்சிதான் தொடங்குவார்: நேரில் சந்தித்த அர்ஜுன் சம்பத் பேட்டி

Published:

arjun sampath met rajini kanth - 2026

சென்னை:
ரஜினி காந்த் அரசியலுக்கு வருவார், அவர் தனிக்கட்சிதான் தொடங்குவார் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார்.

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், இராம.ரவிக்குமார் உள்ளிட்ட கட்சிப் பிரமுகர்கள் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு இன்று காலை 10.30 மணி அளவில் சென்றார். அங்கு ரஜினியுடன் சுமார் 45 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தபின் வெளியே வந்த அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்,
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார். இது என் கணிப்பு. அரசியலுக்கு வருவதற்கான தயாரிப்புகளை முழு அளவில் அவர் செய்து வருகிறார். அரசியலுக்கு அவர் வருவது குறித்து அதிகாரபூர்வமாக விரைவில் அறிவிப்பார். நாங்கள் ரஜினியை சந்தித்து, அவர் அரசியலுக்கு வந்தால் துணை நிற்போம். மாற்றத்தை தமிழகத்தில் உருவாக்குவோம் என்று எங்கள் ஆதரவைத் தெரிவித்தோம்
கழகங்கள் இல்லா தமிழகத்தை கொண்டு வருவோம். தமிழக நலன்களுக்காக எந்தெந்த நேரத்தில் குரல் கொடுக்க வேண்டுமோ அந்தந்த நேரத்தில் எல்லாம் ரஜினி குரல் கொடுத்துள்ளார்.
1996ல் ஆண்டவனே வந்தாலும் காப்பாற்ற முடியாது என்கிற கருத்தை தெரிவித்து ஒரு கூட்டணியை உருவாக்கி ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டவர் ரஜினி. அவர் நிச்சயமாக அரசியலுக்கு வர வேண்டிய தருணம் இது. அவர் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் தனிக்கட்சிதான் தொடங்குவார். அவ்வாறு தனிக்கட்சி தொடங்கினால்தான் அவரால் நல்லது செய்ய முடியும். இன்னொருவரின் தலைமையின் கீழ் இருந்து அவரது கனவுத் திட்டமான நதி நீர் இணைப்பை செய்ய முடியாது என்று கூறினார் அர்ஜுன் சம்பத்.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

Related articles

Recent articles

spot_img