சென்னை விமான நிலைய அறிவிப்பு பலகையில் காணாமல் போன தமிழ்

சற்றுமுன் சென்னை தமிழகம்

சென்னை:

சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் வருகை, புறப்பாடு குறித்த தகவல்களை அறிந்து கொள்ளும் அறிவிப்பு பலகையில் தமிழ் மொழி அறிவிப்புகள் திடீரென காணாமல் போயுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை விமான நிலைய அறிவிப்பு பலகையில் விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடு தொடர்பாக வெளியிடப்படும் தகவல்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி என்று 3 மொழிகளில் அறிவிப்புகள் வந்து கொண்டிருந்தன. இந்நிலையில் திடீரென தமிழ் மொழியில் இருந்து வெளியாகும் அறிவிப்புகள் காணாமல் போயுள்ளன.

நேற்று முதல் தமிழ் மொழியில் வரும் அறிவிப்பு நீக்கப்பட்டதால் பயணிகள் மட்டுமின்றி பயணிகளை அழைத்துச் செல்ல விமான நிலையம் வருவோரும் அறிவிப்பினைப் புரிந்து கொள்ள இயலாமல் அவதிப்பட்டனர். அந்தந்த மாநில மக்கள் பயன்பெறும் வகையில் தகவல்களை இந்தி, ஆங்கிலம் மற்றும் மாநில மொழிகளில் அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. இப்படி நாடு முழுதும் மும்மொழிக் கொள்கை கடைப்பிடிக்கப் படும் போது, திடீரென விமான நிலையத்தில் இருந்து தமிழ் மொழி துரத்தப் பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பயணிகள் கொந்தளிக்கின்றனர்.

இந்நிலையில் அறிவிப்புப் பலகையில் இருந்து தமிழ் மொழி நீக்கப் பட்டிருப்பது குறித்து விளக்கம் அளித்த சென்னை விமான நிலைய இயக்குநர், அறிவிப்பில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்கவே தமிழ் மொழியில் வெளியிடப்படும் அறிவிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.

காலை நேரத்தில் அதிக அளவில் விமான போக்குவரத்து இருப்பதால் அந்த நேரத்தில் 3 மொழியில் அறிவிப்பு வருவதால் பயணிகள் தகவல்களைத் தெரிந்து கொள்ள தாமதம் ஏற்படுவதாக இயக்குநர் கூறியுள்ளார். இதனால் காலை நேரத்தில் மட்டும் இந்தி, தமிழ் மொழியில் அறிவிப்பு வெளியிடப்படாமல், ஆங்கிலத்தில் மட்டுமே வெளியாவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.