காவிரி தீர்ப்பு விவகாரத்தில் யாரும் வாய் திறக்கவேண்டாம்: நிர்வாகிகளுக்கு ரஜினி அறிவுரை

சற்றுமுன் தமிழகம்

சென்னை:
காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், தமிழகம் வஞ்சிக்கப் பட்டுள்ளதாக தமிழகத்தில் அரசியல் மட்டத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரம் கர்நாடகம் இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ளது. இதனால் இரு மாநில மக்களிடையே வித்தியாசமான மன நிலை நிலவுகிறது.

அரசியல் மட்டத்தில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பான மனநிலையை வைத்து, தமிழக கட்சிகள் தங்கள் அரசியல் ரீதியான கருத்துகளை முன்வைத்து வருகின்றன. இந்நிலையில், அரசியல் களத்தில் குதிக்கத் தயாராகவுள்ள ரஜினிக்கு வழக்கம் போல் கன்னடன் என்ற தாக்குதல் தொடுக்கப் பட்டு வருகிறது. ஏற்கெனவே கர்நாடக மாநிலத்தவர் என்பதால், காவிரி விவகாரத்தில் ரஜினி இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்று குறை கூறும் தமிழக அரசியல் தலைவர்கள், இம்முறை அதிக அளவில் தாக்குதல் தொடுக்கத் தயாராகி வருகின்றனர். காரணம், ரஜினியின் அரசியல் பிரவேசம்தான்!

இதனால், உஷாராகியுள்ள ரஜினி, தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு ஒரு வாய்மொழி உத்தரவைப் பிறப்பித்துள்ளார் என்று கூறப் படுகிறது. காவிரி விவகாரத்திலோ, கர்நாடக விஷயத்திலோ, மன்ற நிர்வாகிகள் எந்தக் கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

முன்னதாக, நேற்று இந்த விதமான போக்கை எதிர்பார்த்திருந்ததாலோ என்னவோ, வீடியோ கான்பரன்சிங் மூலம் நடிகர் ரஜினி தனது ரசிகர்கள் மத்தியில் பேசினார். நமக்குள் ஏதேனும் சண்டை வருகிறதா என சிலர் பார்த்து கொண்டு உள்ளனர். ரசிகர்களிடம் ஒழுக்கம் கட்டுப்பாடு இருந்தால் போதும் மற்றதை ஆண்டவன் பார்த்து கொள்வான். உங்கள் எண்ணங்களை தூய்மையாக வைத்திருங்கள். குடும்பங்களை கவனித்த பிறகு மக்கள் பணியில் ஈடுபட வேண்டும் என்று கூறியிருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.