திமுக.,வில் ஒருவருக்கு ஒரு பதவி; அன்பழகன் அறிவிப்பால் ஸ்டாலின் ராஜினாமா செய்கிறார்!

Published:

சென்னை:

திமுக.,வில் இரண்டு பதவிகளில் இருப்போர், ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், அதன் பின்னர் ஏற்படும் காலியிடங்களுக்கு ஏற்ப புதிய நிர்வாகிகளை மாவட்ட செயலாளர்கள் நியமிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார் திமுக.,வின் பொதுச் செயலாளர் அன்பழகன்.

தேசிய அரசியலில் குடும்ப கட்சியாக இல்லாமல், அடிமட்டத் தொண்டன் கூட நாட்டின் முதல்வராக, பிரதமராக, கட்சித் தலைவராக என பல பரிமாணங்களில் வளர்வதற்கு வாய்ப்பு தரக்கூடிய கட்சியாக பாஜக., உள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகளில் அந்த வாய்ப்பு இருந்தாலும், அங்கும் ஒரே நபரே மீண்டும் மீண்டும் தலைவராக, கட்சியின் உயர் பதவிகளில் பொறுப்பு வகிப்பவராக இருக்கக் கூடிய நிலைதான் உள்ளது.

கொள்கை ரீதியான வலது, இடது சாரிக் கட்சிகளைத் தவிர மற்ற கட்சிகள் எல்லாம், தனிநபர், அல்லது குடும்பத்தின் ஆதிக்கத்தில் உள்ள கட்சிகளே. தேசிய அளவிலும், மாநில அளவிலும் பெரும்பாலான கட்சிகள் தனி நபர்களால், தனி நபர்களை முன்வைத்து அரசியல் களம் பதிக்கக் கூடிய கட்சிகளாக உள்ளன.

பாஜக.,வில் ஒருவருக்கு ஒரு பதவி என்பது கட்சிவிதிகளில் உள்ள ஒன்று. ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கையை கடுமையாகக் கடைபிடித்து வருகிறது பாஜக. முதல்வராகவோ, மத்திய அமைச்சராகவோ இருக்கும் பாஜக., தலைவர்களுக்கு கட்சியில் பதவி கிடையாது. ஆனால் திமுக, அதிமுக , உள்ளிட்ட கட்சிகளில் அப்படியான நிலை இல்லை.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அமைச்சராக இருப்பவர்கள், கட்சிப் பதவியில் இருப்பார்கள். கட்சி நிர்வாகத்தில் ஒருவர் இரு பதவியில் இருப்பது சர்வ சாதாரணம். இதனால் தொண்டர்கள் பலர் இன்னமும் அடிமட்டத் தொண்டர்களாகவே உள்ளனர். மேலும், திமுக.,வில் குடும்பத்தினரே வழி வழியாக பதவிகளிலும் பொறுப்புகளிலும் வருவதால், தொண்டர்கள் பலர் சோர்வடைந்து உள்ளனர். இந்த நிலையில் கட்சியில் இருக்கும் தொண்டர்களை ஏதாவது பதவி கொடுத்து இருத்தி வைக்க வேண்டிய நிலையில் திமுக., உள்ளது.

இதற்கு முன்னுதாரணமாக, செயல்தலைவர் மு.க.ஸ்டாலினே முதல் நபராக முன்வந்து ஒருவருக்கு ஒரு பதவி திட்டத்தை செயல் படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இளைஞரணி செயலாளர், செயல் தலைவர் என்ற பதவியை வைத்துள்ள ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளார்.

நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் அரசியல் பயணத்தில் அடியெடுத்து வைத்துள்ளனர். கட்சி தொடங்கி விட்டார் கமல். ரஜினியும் அதிதீவிரமாக களத்தில் இறங்கப் போகிறார். இந்நிலையில், தங்கள் கட்சியில் இருந்து இந்த நடிகர்களின் கட்சிக்கு தொண்டர்கள் கட்சி தாவுவதை தடுக்க வேண்டிய நிலையில் திமுக., உள்ளது. எனவே, தொண்டர்களை, நிர்வாகிகளை அழைத்து குறைகளக் கேட்டு வருகிறார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின். அதன்படி, மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் சந்தித்து பேசி, கள ஆய்வு நடத்தும் ஸ்டாலின், நிர்வாகிகளின் குறைகளை புகார் பெட்டியில் போடச் சொல்கிறார். இதன்படி களையெடுக்கும் பணியை தொடங்கியுள்ளார்.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

எனவே கட்சித் தொண்டர்கள் சிலருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதற்காக, ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கையை கையில் எடுத்துள்ளது திமுக. இரு பதவிகளில் இருப்போர் ஒரு பதவியை ராஜினாமா செய்த பின்னர் இருக்கும் காலியிடங்களுக்கு ஏற்ப புதிய நிர்வாகிகளை, மாவட்டச் செயலாளர்கள் நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன், புதிய நிர்வாகிகளை நியமித்து மார்ச் 31ஆம் தேதிக்குள் மாவட்டச் செயலாளர்கள் திமுக தலைமையிடம் பட்டியல் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

1984இல் மு.க. ஸ்டாலின் திமுகவின் இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டார். திமுக செயல் தலைவராக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார் ஸ்டாலின். புதிய அறிவிப்பின் படி இளைஞரணி செயலாளர் பதவியை ஸ்டாலின் ராஜினாமா செய்து விட்டு புதிய செயலாளரை நியமிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தப் பதவிக்கும்கூட, புதிதாக தீவிர அரசியல் களத்தில் குதிக்கவுள்ளதாகக் கூறப்படும் உதயநிதி ஸ்டாலின் பெயரை யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் திமுக.,வினர்.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

Related articles

Recent articles

spot_img