குமரியில் கூடிய சுற்றுலா பயணிகள்..

Published:

500x300 1830846 kk - 2026

கன்னியாகுமரியில் இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது.இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானவர்கள் வந்திருந்தனர்.

கன்னியாகுமரி, இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்து உள்ளது கன்னியாகுமரி. இது ஒரு உலகப்புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.இங்கு வருடம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் வழக்கத்தை விட அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். இந்த 3 மாத காலமும் இங்கு சீசன் காலமாக கருதப்படுகிறது.

இதே போல ஏப்ரல், மே கோடை விடுமுறை சீசன் காலங்களிலும் ஏராளமான சுற்றலா பயணிகள் கன்னியாகுமரிக்கு படையெடுப்பார்கள். இதற்கிடையில் கடந்த நவம்பர் மாதம் 17-ந்தேதி தொடங்கிய சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் கடந்த மாதத்துடன் முடிவடைந்தது. சீசன் முடிந்த பிறகும் கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து குவிந்த வண்ணமாக உள்ளனர். இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படையெடுத்துச் சென்ற வண்ணமாக உள்ளனர்.அந்த அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து குவிந்தனர்.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம், சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.கன்னியாகுமரி கடலில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சி தெளிவாகத் தெரிந்தது. சூரியன் உதயமான இந்த அற்புத காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

அதன் பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத் துறையில் நீண்ட “கியூ”வில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கிய பிறகு அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

சுற்றுலா பயணிகள் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டனர். திருவள்ளுவர் சிலையில் பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகும் சுற்றுலா பயணிகள் பார்வையிட இன்னும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், கலங்கரை விளக்கம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்குபூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரைபகுதி, மியூசியம்,அரசுஅருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள்கூட்டம் நிரம்பி வழிந்தது.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தளங்கள் களை கட்டியது. கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இந்த சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. கடற்கரை பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img