‘வடசென்னை’ சர்ச்சைக்குரிய காட்சி நீக்கப்படும்: வெற்றிமாறன் வருத்தம்!

சற்றுமுன் சினி நியூஸ் லைஃப் ஸ்டைல்

vadachennai movie - 2026

‘வடசென்னை’ படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க முடிவு செய்துள்ளதாகவும் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார் இயக்குநர் வெற்றிமாறன்.


வட சென்னை படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குறிய காட்சிகள் 10 நாட்களுக்குள் நீக்கப்படும்; தனி நபரையோ, சமூகத்தையோ இழிவுபடுத்த வேண்டும் என்பது நோக்கம் இல்லை படத்தில் உள்ள காட்சிகளால் யாருடைய மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்

– இயக்குநர் வெற்றிமாறன்


வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘வடசென்னை’. தனுஷ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் இயக்குநர் அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் தனுஷுடன் இணைந்து நடித்திருக்கிறார்கள். படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பு கிடைத்துள்ளது. இருப்பினும், இதில் மீனவர்களை தவறாக சித்திரித்து இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், எங்கள் படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் மீனவ சமுதாயத்தை இழிவுபடுத்தும் விதமாகவும், அவர்களது மனம் புண்படும்படியாகவும் இருப்பதாக மீனவ அமைப்பினர் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.

நான் தயாரிப்பாளரைத் தொடர்பு கொண்டு பேசினேன். எங்கள் நோக்கம் எப்போதுமே, எந்தவொரு ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு எதிராக அரசியலோ, சினிமாவோ செய்வதல்ல. இப்படத்தில் சில காட்சிகள், குறிப்பாக கப்பலில் நடக்கும் முதலிரவு காட்சி மீனவ சமுதாயத்தை மிகவும் இழிவாக சித்திரிப்பதாக அவர்கள் சொல்லியிருந்தார்கள். அக்காட்சியை படத்திலிருந்து நீக்குவதற்கு தீர்மானித்திருக்கிறோம். அதற்கான வேலைகளைத் தொடங்கியிருக்கிறோம். தணிக்கைக் குழுவையும் அணுகியுள்ளோம். அவர்கள் அதை பார்த்து முடித்து, படத்திலிருந்து நீக்குவதற்கு 7 முதல் 10 வேலை நாட்களாகும். கண்டிப்பாக நாங்கள் நீக்கிவிடுவோம்.

எங்கள் நோக்கம் யாரையும் இழிவுபடுத்துவதோ அல்லது குறைத்துக் காட்டி அதன் மூலமாக சினிமாவில் லாபமோ, பெயர் புகழ் சம்பாதிப்பதோ அல்ல. அதே போல வடசென்னை 2, 3ஆம் பாகங்களில் அப்பகுதி மக்களின் வாழ்வாதார பிரச்னைகளையும் அவர்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் நெருக்கடிகளை விவாதிப்பதும் எப்படி அங்குள்ள இளைஞர்கள் அனைத்து நெருக்கடிகளிலிருந்து மீண்டு வருகிறார்கள் என்றும் பதிவு செய்ய வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். இப்படத்துடைய பாத்திரப் படைப்புகள், சம்பவங்கள் தனிப்பட்ட நபரையோ, தனிப்பட்ட சமூகத்தையோ புண்படுத்தியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிக்கிறோம். மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என்று வெற்றிமாறன் அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.