புகழ்பெற்ற உத்தரகோசமங்கை மரகத நடராஜரை கொள்ளை அடிக்க முயற்சி! பக்தர்கள் அதிர்ச்சி!

Published:

maragatha natarajar sannidhi temple - 2026

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே உள்ள உத்தரகோசமங்கையில் புகழ்பெற்ற மரகத நடராஜர் சிலையை திருட முயற்சி நடந்துள்ளது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மரகத நடராஜர் சிலையை திருடமுயற்சி செய்த கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் அருகே உள்ளது திருஉத்திரகோசமங்கை. பாடல் பெற்ற தலமான இது மிகப் பழைமையான தலம் என்பதுடன், பக்தர்கள் அதிகம் வந்து செல்லும் ஆலயமாகத் திகழ்கிறது. அடர் பச்சை நிறத்தில் திகழும் இங்குள்ள மரகத நடராஜர் விக்ரஹம், மிகவும் பழைமையானது மட்டுமல்ல, அதிசயமான அபூர்வமான விக்ரஹமும் கூட!

பிரதான சிவன், அம்பாள் சந்நிதிக்கு பின்புறத்தில் தனியாக ஒரு கோயில் போன்று திகழும் நடராஜர் சந்நிதியில், நேற்று இரவு பூஜை முடிந்ததும் பூசாரிகள் கோவிலைப் பூட்டிவிட்டு சென்றனர். கோவில் காவல்பணியில் செல்லமுத்து என்பவர் ஈடுபட்டிருந்தார். அப்போது, நள்ளிரவில் கோவிலுக்கு வந்த கொள்ளையர்கள் மரகத நடராஜர் சிலையை திருட முயற்சி செய்துள்ளனர்.

சத்தம் கேட்டு வந்த செல்லமுத்துவை அவர்கள் தலையில் அரிவாளால் வெட்டியதில் அவர் பலத்த காயம் அடைந்தார். கருவறைக்குள் சென்ற கொள்ளையர்கள் விக்ரஹத்தைக் கொள்ளை அடிக்க முயற்சித்த நிலையில், திடீரென அலாரம் அடித்தது. இதனால் பயந்துபோன கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

இந் நிலையில், அலாரம் சத்தம் கேட்டு அருகிலிருந்தோர் கோவிலுக்கு ஓடி வந்தனர். அப்போது, பலத்த காயமடைந்து கிடந்த செல்லமுத்துவை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்தக் கொள்ளை முயற்சி குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவிலின் பாதுகாப்பு அதிகாரி சுப்பையா என்பவர் மாற்றப்பட்டு, கண்ணன் என்பவர் நியமிக்கப்பட்டாராம். இந்நிலையில், இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கோயிலில் உள்ள மரகத நடராஜர் விக்ரஹத்துக்கு வருடம் ஒரு முறை மட்டுமே சந்தனக் காப்பு களையப் பட்டு மரகத திருமேனி தரிசனத்துக்கு அனுமதிக்கப் படும். தினமும் நடு உச்சி மதிய நேரத்தில் இங்கே மரகத லிங்கம், மற்றும் ஸ்படிக லிங்கத்துக்கு கோயில் பட்டர்கள் பக்தர்கள் முன்னிலையில் அபிஷேகம் செய்துவைப்பர்!

uthirakosamangai temple security - 2026வயதில் முதியவராயிருந்தாலும், தனி ஒருவராய் நின்று திரு உத்தரகோசமங்கை ஆலயத்தில் மரகத நடராஜரை திருட வந்தவர்களை விரட்டியடித்த இவரை எத்தனை பாராட்டினாலும் தகும்! நம் முன்னோர்கள் அரும்பாடுப்பட்டு அமைத்த ஆலயங்கள், தம் சந்ததியினர் வழிவழியாய் காப்பர் எனும் நம்பிக்கையால்தான். ஆலயத்தை காக்கவும் இயலாமல், இருக்கின்ற விக்ரஹங்களை கொள்ளை அடிக்க விட்டு வேடிக்கை பார்க்கும் அறநிலையத்துறை, ஆலயத்தை விட்டு வெளியேற வேண்டும். இத்தனை புகழ்பெற்ற ஆலயத்தில் காவலர் ஒருவர்தான் என்பதே வேதனைக்குரியது. பாடல் பெற்ற இன்னும் பல்லாயிரம் ஆலயங்களின் பாதுகாப்பை நினைத்தால் உண்மையில் வருத்தமாக உள்ளது என்று உள்ளம் குமுறுகின்றனர் பக்தர்கள்!

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img