ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு: மேல்முறையீடு செய்கிறது அரசு!

சற்றுமுன் தமிழகம் நெல்லை லைஃப் ஸ்டைல் வணிகம்
sterlite - 2026

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை நியாயப்படுத்த முடியாது என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான வேதாந்தாவின் வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம்  பிறப்பித்த உத்தரவில், ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்குவதற்கான உரிமத்தை தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் புதுப்பித்து வழங்கவேண்டும் என்று கூறீயுள்ளது. 

மேலும், ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையையும் தேசிய பசுமை தீர்ப்பாயம் ரத்து செய்தது.  துண்டிக்கப்பட்ட மின்சாரத்தையும் உடனடியாக ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்க வேண்டும்; ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கும் போது மாவட்ட ஆட்சியர் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப் பட்டுள்ளது.

தூத்துக்குடியில் நலத் திட்டங்களை மேற்கொள்ள வேதாந்தா நிறுவனம் 3 ஆண்டுகளில் ரூ.100 கோடி செலவு செய்ய வேண்டும் என்றும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மே 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்தது. தொடர்ந்து போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.  அதில்  போராட்டக்காரர்கள் 13 பேர் உயிரிழந்தனர்.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தீவிரமானதால், அதனை சமாளிக்க ஆலையை மூடி சீல் வைத்தது தமிழக அரசு. இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக அரசின் செயல்பாட்டுக்கு தடை கோரியும், வேதாந்தா குழுமம் வழக்கு தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், நீதிபதி தருண் அகர்வாலா குழு மூலம் ஸ்டெர்லைட்டில் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவில், ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்க அனுமதிக்கலாம் என தருண் அகர்வாலா குழு பரிந்துரை செய்தது.

தருண் அகர்வால் குழுவின் பரிந்துரையை ஏற்று ஸ்டெர்லைட் ஆலையை இயக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. மேலும்,  ஆலையை சுற்றியுள்ள பகுதியின் நிலத்தடி நீர் தன்மையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும், ஆலை தொடர்பான புகார்களை தெரிவிக்க இணையதள வசதி செய்ய வேண்டும் என்றும் வேதாந்தா நிறுவனத்திற்கு  தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது. 

மேலும், 3 வாரத்தில் ஆலையை திறக்க அனுமதி வழங்க தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது தேசிய பசுமை தீர்ப்பாயம்.

ALSO READ:  இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்ததை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் கூறியுள்ளார். ஸ்டெர்லைட் ஆலை இயங்காமல் இருக்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று அமைச்சர் கருப்பணன் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.