தை அமாவாசை! முன்னோர்க்கு திதி கொடுத்து நீர் நிலைகளில் வழிபாடு!

Published:

courtallam1 - 2026

தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி கொடுத்து நீர் நிலைகளில் அன்பர்கள் வழிபாடு நடத்தினர். தை அமாவாசையை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் புனித நீராடி, மூதாதையருக்கு திதி கொடுத்தனர்.

தை மாத அமாவாசை நீத்தார் கடன் தீர்க்கும் வகையில் புனித நாளாகக் கருதப்படுகிறது. இந்நாளில் மறைந்த மூதாதையருக்கு திதி கொடுத்து நீத்தார் சடங்குகளை செய்வது வழக்கம். குறிப்பாக, நீர்நிலைகளில் புனித நீராடி, இந்தச் சடங்கை மேற்கொள்கின்றார்கள் பலர்.

இன்று இதனை முன்னிட்டு, புனிதநீர் நிலைகளில் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர். நெல்லை மாவட்டம் அருவிக் கரையான திருக்குற்றாலத்திலும், அம்பாசமுத்திரத்தை அடுத்த பாபநாசம் தாமிரபரணி ஆற்றிலும் புனித நீராடிய பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

courtallam2 - 2026

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் அமர்ந்து படையல் வைத்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து கடலில் புனித நீராடினர்.

கன்னியாகுமரி, கோடியக்கரை, பவானி கூடுதுறை, திருச்சி அம்மா மண்டபம் ஆகிய இடங்களில் திரளானோர் திதிகொடுத்து, ஏழைகளுக்கு தானங்களை வழங்கினர்.

ALSO READ:  போதைப் பழக்கத்துக்கு எதிரான இயக்கத்துக்கு வலு சேர்ப்போம்! மனதின் குரலில் பிரதமர்!

ராமேஸ்வரத்தில் திரண்ட லட்சக்கணக்கான பக்தர்கள், கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர். இன்று அதிகாலை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அக்னிதீர்த்தக் கடலில் புனித நீராடினர். அதனைத் தொடர்ந்து முன்னோர்களுக்கு எள்ளு, பிண்டம் வைத்து தர்ப்பணம் செய்து வழிபாடு செய்தனர்.

சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் குளம் அருகே ஏராளமானோர், தர்ப்பணம் கொடுத்து முன்னோருக்கு வழிபாடு செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு, தை அமாவாசையை முன்னிட்டு தமிழகம் முழுதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். சோதனைகளுக்குப் பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

Related articles

Recent articles

spot_img