89 பேரை வைத்துக் கொண்டு திமுக., செய்ய முடியாததை ஒருவரைக் கூட வைத்திருக்காத நாம் செய்ய முடியும்!

சற்றுமுன் சென்னை

anbumani ramadoss - 2026

விழுப்புரம் மாவட்டம் வானூர், பட்டானூரில் சனிக்கிழமை இன்று பாமகவின் சிறப்பு பொதுக் கூழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அன்புமணி, கூட்டணி வைத்ததால் பாமக.,வை சிலர் வசை பாடுவது குறித்து சிலவற்றை கவலையுடன் பகிர்ந்து கொண்டார்.

பாமக., தொண்டர்களுக்கு அவர் கொடுத்த சில அறிவுரைகள்: தேர்தல் கூட்டணி முடிவை சிலர் விமர்சிக்கிறார்கள். கட்சியின் வயதில் திமுக, அதிமுகவுக்கு அடுத்து பாமக உள்ளது. நம் கட்சியின் நோக்கம் தமிழகம் முன்னேற வேண்டும். ஆட்சிக்கு வந்தால்தான் நம் இலக்கை எட்டமுடியும். உதாரணத்துக்கு, புகையிலைக்கு எதிராக தொடர்ந்து போராடினோம். மத்தியில் அமைச்சர் பதவிக்கு வந்ததும் பொது இடங்களில் புகை பிடிக்கக் கூடாது என ஆணையிட்டோம்.

அதுபோல் தமிழகம் முன்னேற, நம் இலக்கு நிறைவேற, தமிழகத்தில் பாமக ஆட்சிக்கு வருவது உறுதி.

2011ஆம் ஆண்டு தனித்துப் போட்டி என முடிவெடுத்து அதை தைரியமாக செயல்படுத்தினோம். இந்த தைரியம் தமிழகத்தில் எந்தக் கட்சிக்கும் இல்லை.
தனித்து போட்டி என்று அறிவித்து கடந்த காலங்களில் போட்டியிட்டோம். மக்கள் நமக்குக் கொடுத்தது 6 சதவீத வாக்குகள்தான். வரும் உள்ளாட்சித் தேர்தலில் நாம் அதிக இடங்களைப் பெறுவோம்!

நம் இலக்குகளை அடைய சூழலுக்கேற்ப நாம் வியூகங்களை அமைக்க வேண்டும். அந்த அடிப்படையில்தான் ராமதாஸ் இந்த முடிவை எடுத்துள்ளார்.

நேற்று தைலாபுரத்தில் முதல்வரும், துணை முதல்வரும் ராமதாஸிடம் ஆசி பெற்றார்கள். இது நமக்குக் கிடைத்த மரியாதை. பாமக எந்தக் கொள்கையையும் விட்டுக் கொடுக்காமல் 10 அம்ச கோரிக்கையுடன்தான் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது. அதிமுகவுடன் இணைந்து இக்கோரிக்கைகளுக்கு குரல் கொடுத்தால் எளிதில் நம் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றும்.

சத்திரியனாக இருப்பதைவிட சாணக்கியனாக இருப்பது முக்கியம். 89 எம்எல்ஏ.,க்களை கொண்டுள்ள திமுகவால் செய்ய முடியாததை ஒரு எம்எல்ஏ.,கூட இல்லாத பாமகவால் செய்ய முடியும். இக்கூட்டணி அமைக்கப்பட்டதால் பாமக தனது கொள்கையிலிருந்து கொஞ்சமும் பின்வாங்கவில்லை… என்றார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.